மாணவி லூயிஸ் சோபியா கைது செய்யப்பட்டதில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது- மனித உரிமைகள் ஆணையம்
மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என்று மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது.
சென்னை,
கடந்த 2018- ஆம் ஆண்டு அப்போது பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன், சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் விமானத்தில் பயணம் செய்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவரை பார்த்ததும் சோபியா என்ற மாணவி, பாஜகவுக்கு எதிராக கோஷமிட்டார். இதனையடுத்து, தமிழிசை சவுந்தரராஜனுக்கும் அந்த பெண்ணுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
கோஷமிட்ட சோபியாவுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். விசாரணைக்குப் பிறகு சோபியாவை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையம் விசாரணை நடத்தியது.
இந்த நிலையில், மாணவி சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது என்று மனித உரிமை ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், மாணவியின் தந்தைக்கு ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.