தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளில் மேலும் தளர்வு- சமுதாய, அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி
திருமணம், இறப்பு நிகழ்வுகளை தவிர அனைத்து நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்கியது
சென்னை,
கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி மாதம் 7-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.
கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், ஜனவரி 28-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், 30-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டன. கடந்த பிப்ரவரி 16 ஆம் தேதி முதல் நர்சரி பள்ளிகள் 16-ந்தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. தியேட்டர்கள், ஓட்டல்களில் 100 சதவீதம் அனுமதி அளிக்கப்பட்டது.
கொரோனா தொற்று பரவல் கடந்த சில வாரங்களாக மளமளவென சரிந்து வருகிறது. தினசரி பாதிப்பு 400-க்கும் கீழ் வந்துள்ளது. இதனால், தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகளில் மேலும் பல தளர்வுகளை அறிவித்து முதல் அமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். நாளை முதல் வரும் 31ஆம் தேதி கட்டுபாடுகளில் விதிக்கப்பட்டுள்ள புதிய தளர்வுகள் அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
*மார்ச் 3 ஆம் தேதி முதல் சமுதாய, கலாசார அரசியல் கூட்டங்களுக்கு அனுமதி
*திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் 500- பேர் வரை பங்கேற்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.
*இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை பங்கேற்கலாம்.
*திருமணம், இறப்பு நிகழ்வுகளை தவிர அனைத்து நடவடிக்கைகளுக்கான கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு நீக்கியது
*கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக விதிக்கப்பட்ட இதர கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுகின்றன.