போலீஸ் உடையில் வலம் வந்து பல லட்சம் மோசடி செய்த கில்லாடி பெண்..!
தமிழகம் முழுவதும் போலீஸ் உடையில் வலம் வந்து பல லட்சம் மோசடி செய்த கில்லாடி பெண்ணை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.
வேலூர்,
வேலூர் சேண்பாக்கத்தை சேர்ந்தவர் ரோகினி (32) . தற்போது காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரம் பகுதியில் அவரது கணவர் சந்துருடன் வசித்து வருகிறார்.
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு இந்திரா நகரைச் சேர்ந்த தினேஷ்குமார்(43) என்பவருக்கு ரோகினி அவரது நண்பர் மூலம் அறிமுகமானார். அப்போது தான் சென்னையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணி புரிவதாகவும் தற்போது சஸ்பெண்டு செய்யப்பட்டு வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் போலீஸ் துறையில் குற்ற வழக்குகளில் சிக்கிய கார், பைக் உள்ளிட்ட வாகனங்களை குறைந்த விலையில் பெற்று தருவதாக தினேஷ் குமாரிடம் ஆசைவார்த்தை கூறினார்.
இதனை நம்பிய தினேஷ்குமார் அந்த வாகனங்களை வாங்குவதற்கு ரோகினியை தொடர்பு கொண்டு இன்னோவா காருக்கு ரூ.7 லட்சம் மற்றொரு காருக்கு ரூ.7 லட்சம் பணத்தை பணத்தை வங்கி கணக்கில் செலுத்தியுள்ளார்.
இதனை தொடர்ந்து தினேஷ்குமார் சென்னையை சேர்ந்த அவரது நண்பர் செந்தில், வேலூரை சேர்ந்த குமார் ஆகியோரை ரோகிணிக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவர்களிடமும் போலீஸ் துறையில் உள்ள வாகனங்களை வாங்கி தருவதாக கூறி ரூ. 5 லட்சம் பெற்றுக் கொண்டார்.
ஆனால் அவர்களுக்கு எந்த வாகனமும் வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தினேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் ரோகிணியை தொடர்பு கொண்டபோது அவர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் என ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதுகுறித்து தினேஷ் குமார் வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கடந்த 25-ந் தேதி புகார் அளித்தார். போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் வேலூர் ஆற்காடு ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த ரோகிணியை நேற்று போலீசார் மடக்கிப் பிடித்தனர். அவரை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
அதில் ரோகிணி ஏற்கனவே தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தினேஷ் குமார் மற்றும் அவரது நண்பர்களிடம் மட்டும் ரூ.24 லட்சம் மோசடி செய்துள்ளார். கடந்த 2012-ம் ஆண்டு முதலே ரோகினி தான் போலீஸ் என கூறி சீருடையில் வலம்வந்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டுள்ளார். இது சம்பந்தமாக 2012-ம் ஆண்டு வேலூர் பாகாயம் போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு போலீஸ் நிலையங்களில் இவர் மீது 14 வழக்குகள் உள்ளன. நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் செயின் திருடியதாக இவர் மீது வழக்கு ஒன்று உள்ளது. தமிழகம் முழுவதும் பல பேரிடம் பல லட்ச ரூபாய் அளவுக்கு மோசடியில் இவர் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
ரோகிணியின் மோசடி வேலைக்கு அவரது கணவர் சந்துரு உடந்தையாக இருந்துள்ளார். அவரது வங்கிக்கணக்கு மூலமாகத்தான் பல லட்சம் பணம் கைமாறி உள்ளது. இந்த தகவலை சேகரித்த போலீசார் ரோகிணி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். அவரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர்.
இந்த வழக்கு சம்பந்தமாக ரோகிணியின் கணவரை போலீசார் தேடி வருகின்றனர். ரோகிணியிடம் ஏமாந்தவர்கள் இருந்தால் புகார்களை அளிக்கலாம் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.