ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் - அதிகாரிகள் தகவல்
ஜி.எஸ்.டி. வரி படிவம் தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்று ஜி.எஸ்.டி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) நடைமுறையில், வரி கணக்கு தாக்கல் செய்ய, பல்வேறு படிவங்கள் உள்ளன. இதில், ஆண்டு முழுவதுக்கும், ஒரே கணக்கு தாக்கல் செய்ய, ‘படிவம்-9’ பயன்படுத்தப்படுகிறது.
ஆண்டுக்கு ரூ.2 கோடி வரை, வரவு, செலவு உள்ள அனைத்து வணிகர்களும், ‘படிவம்-9’ தாக்கல் செய்ய வேண்டும். ரூ.2 கோடிக்கு மேல் வரவு, செலவு உள்ள நிறுவனங்கள், ‘படிவம் 9-சி’ தாக்கல் செய்ய வேண்டும். 2020-21-ம் நிதியாண்டுக்கான, படிவம் 9 மற்றும் 9-சி தாக்கல் செய்வதற்கான அவகாசம், 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் நிறைவடைய இருந்தது.
இந்த அவகாசத்தை, நடப்பாண்டு பிப்ரவரி 28-ந்தேதி அதாவது இன்று (திங்கட்கிழமை) வரை நீட்டித்து, மத்திய மறைமுக வரிகள் வாரியம் அறிவித்திருந்தது. இந்த அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. இதுவரை, கணக்கு தாக்கல் செய்யாத நிறுவனங்கள், உடனடியாக தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேற்கண்ட தகவல்களை ஜி.எஸ்.டி. அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.