வருசநாடு வனப்பகுதி: கூலி வேலைக்கு அனுமதிக்காததால் வனகாவலர் மீது தாக்குதல்..!
வருசநாடு அருகே பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் கூலி வேலைக்கு செல்ல அனுமதிக்காததால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் வனக்காவலர் தாக்கப்பட்டார்.
தேனி,
கடமலை-மயிலை ஒன்றியத்தில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி அமைந்திருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த வனப்பகுதியை புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்தது. அதன்பின்னர் வனத்துறையினர் வனப்பகுதியில் வசித்து வரும் மலைக்கிராம பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்தனர்.
கடந்த ஆண்டு தொடரப்பட்ட பொதுநல வழக்கில் மலைக்கிராம பொதுமக்கள் அனைவரையும் வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதனை எதிர்த்து மலைக்கிராம பொதுமக்கள் அதே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது இலவம் பஞ்சு சீசன் தொடங்கியுள்ள நிலையில் நேற்று காலை கோரையூத்து உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட கூலி தொழிலாளர்கள் வெள்ளிமலைக்கு செல்லும் அரசு பஸ்சில் சென்றனர். அப்போது மஞ்சனூத்து சோதனை சாவடியில் பாதுகாப்பு பணியில் இருந்த வனக்காவலர் செல்லத்துரை முறையான அனுமதி இல்லாமல் கூலி வேலைக்காக வனப்பகுதிக்குள் அனுமதிக்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது பஸ்சில் வந்தவர்களுக்கும் வனக்காவலருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அனுமதி மறுத்ததால் பஸ்சில் வந்தவர்கள் அனைவரும் வெள்ளிமலை சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். அப்போது அங்கு வந்த சிலர் வனக்காவலர் செல்லத்துரையை தாக்கி விட்டு அவரது செல்போனை பிடிங்கி உடைத்து விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.
தாக்கப்பட்ட வனக்காவலர் செல்லதுரை (48) தேனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் செல்லத்துரை தாக்கியதாக கோரையூத்து கிராமத்தை சேர்ந்த பஞ்சம்மாள் (55), ராணி (47), ஒச்சம்மாள் (58) ஆகிய பெண்கள் 3 பேர் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2 தரப்பில் இருந்தும் மயிலாடும்பாறை போலீசாரிடம் புகார் மனுக்கள் பெற்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.