தூத்துக்குடி தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 17 வயது சிறுவன் கைது..!

தூத்துக்குடியில் தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2022-02-27 08:39 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி பாலதண்டாயுதநகரை சேர்ந்தவர் கண்ணன்(48) தாளமுத்துநகரில் டெய்லர் கடை வைத்து உள்ளார். இவர் திமுக. கிளை செயலாளராகவும் உள்ளார். கடந்த 4 நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல கடையில் இருந்த கண்ணனை அங்கு வந்த 3 பேர் வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து  தாளமுத்துநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பணியில் அஜாக்கிரதையாக இருந்த காவல்துறையினரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்ணனின் குடும்பத்தினர், உறவினர்கள், வியாபாரிகள் கடையடைப்பு நடத்தி மறியலில் ஈடுபடடுனர்.

இதனையடுத்து போலீசார் ஜெயேந்திரன், 18 வயது வாலிபர் மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரையும் தேடி வந்தனர்.

இதற்கிடையே  ஜெயேந்திரன், மற்றும் 18 வயது வாலிபர் ஆகிய 2 பேரையும் தாளமுத்துநகர் போலீசார்  நேற்று கைது செய்தனர். தொடர்ந்து தப்பி ஓடிய 17 வயது சிறுவனை தேடி வந்தனர். இந்நிலையில் இன்று 17 வயது சிறுவனையும் போலீசார் கைது செய்து தூத்துக்குடி 2 வது ஜே.எம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் 3 பேரும் தாளமுத்து நகர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் நாங்கள் பாலதண்டாயுதநகர் பகுதியில் பெண்களை கேலி செய்தும், சண்டித்தனம் செய்தும் வந்தோம். இதனை கண்ணன் அப்பகுதி பிரமுகர் என்பதால் அடிக்கடி கண்டித்து வந்தார். எங்களை ஒடுக்க நினைத்து நண்பருடன் சேர்ந்து போலீசில் புகார் தெரிவித்தார். இதனையறிந்து ஆத்திரமடைந்த  நாங்கள் அவரை வெட்டி கொலை செய்துவிட்டோம் என்றுதெரிவித்துள்ளனர்.

போலீசில் புகார் அளித்ததால் ஆத்திரத்தில் அந்த வாலிபர்கள் கண்ணனை வெட்டிக் கொலை செய்துள்ளனர். போலீசார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டு இருந்தால் கண்ணனின் கொலையை தடுத்திருக்கலாம் என பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இதனை அடுத்து தாளமுத்துநகர் சப்-இன்ஸ்பெக்டர் சங்கரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார். 


மேலும் செய்திகள்