ராமநத்தம் அருகே விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலி
ராமநத்தம் அருகே தற்கொலை மிரட்டலுக்கு பயந்து தாய் வாங்கி கொடுத்த விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள், தடுப்புச்சுவரில் மோதிய விபத்தில் என்ஜினீயரிங் மாணவர் பலியானார்.
ராமநத்தம்,
திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள எழுத்தூரை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மனைவி சித்ரா. இவர்களது ஒரே மகன் பிரசாந்த் (வயது 22). ராமநாதன் இறந்து விட்டார். சித்ரா அந்த பகுதியில் உள்ள ஒரு வங்கியில் ஒப்பந்த அடிப்படையில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வருகிறார். கோவையில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பிரசாந்த் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவையில் இருந்து சொந்த ஊருக்கு பிரசாந்த் வந்தார். அப்போது தனது தாய் சித்ராவிடம், தனக்கு கே.டி.எம். மோட்டார் சைக்கிள் வேண்டும் என்று கேட்டுள்ளார்.
இந்த வகை மோட்டார் சைக்கிள் இளைஞர்கள் அதிகம் விரும்பும் மோட்டார் சைக்கிள் ஆகும். ஏனெனில் என்ஜின் செயல்திறன்(பவர்) அதிகம் கொண்டதாக இந்த வகை மோட்டார் சைக்கிள் உள்ளது. எனவே இந்த மோட்டார் சைக்கிள் மீது அலாதி காதல் கொண்ட பிரசாந்த் தனக்கு அந்த வகை மோட்டார் சைக்கிளை கண்டிப்பாக வாங்கிதர வேண்டும் என்று அவரது தாயிடம் கேட்டுள்ளார். ஆனால், அதற்கு அவர் முடியாது என்று தெரிவித்துள்ளார். எப்படியும் மோட்டார் சைக்கிளை வாங்கிவிட வேண்டும் என்று எண்ணிய, பிரசாந்த், தான் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வேன் என்று தெரிவித்துள்ளார். இதனால் வேறு வழியின்றி தன்னிடம் இருந்த நகைகளை அடகு வைத்து, கடந்த 24-ந்தேதி 3 லட்சம் ரூபாய்க்கு புதிதாக கே.டி.எம். மோட்டார் சைக்கிளை வாங்கி கொடுத்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு, தொழுதூர் நோக்கி பிரசாந்த் சென்றுள்ளார். அப்போது எழுத்தூரில் தனியார் பள்ளி அருகே உள்ள வளைவில் திரும்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுபற்றி தகவல் அறிந்த சித்ரா அங்கு சென்று பிணமாக கிடந்த தனது மகனின் உடலை பார்த்து கதறி அழுதார். இது கல்நெஞ்சையும் கரைய செய்வதாக இருந்தது. இதற்கிடையே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ராமநத்தம் போலீசார், பிரசாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திட்டக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விலைஉயர்ந்த மோட்டார் சைக்கிள் வாங்கி தரவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டிய ஒரே மகன், தற்போது அந்த மோட்டார் சைக்கிளாலேயே அவரது உயிரை இழந்து இருப்பது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.