தேர்வுக்குழு செயலாளரின் ஓய்வூதியத்தில் இருந்து மாணவர்களுக்கு இழப்பீடு - ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு

கவுன்சிலிங் நடத்தாமல் மருத்துவ மேற்படிப்பில் மாணவர்கள் சேர்க்கை நடத்த காரணமாக இருந்த தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் இருந்து மாணவர்களுக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

Update: 2022-02-26 23:15 GMT
சென்னை,

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி மருத்துவ மேற்படிப்புக்கான இறுதி கட்ட கவுன்சிலிங் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும். இதன்படி 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் இறுதி கட்ட கவுன்சிலிங் தமிழ்நாட்டில் முடிக்கவில்லை.

கவுன்சிலிங் நடத்தாமல், தனியார் கல்லூரிகளில் மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்பி கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து கீதாஞ்சலி உள்ளிட்ட மாணவர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார் மனுதாரர்கள் சார்பில் வக்கீல் தங்கசிவம் ஆஜராகி வாதிட்டார். பின்னர் நீதிபதி, ‘‘74 மருத்துவ மேற்படிப்பு இடங்களை நிரப்பிக்கொள்ள தனியார் மருத்துவக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இந்த இடங்கள் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை கொண்டு நிரப்பப்பட்டு உள்ளது.

இந்த ஆவணங்களை பார்க்கும்போது மருத்துவக்கல்வி இயக்குனரக அதிகாரிகள், தனியார் மருத்துவக்கல்லூரிகளுக்கும் இடையே ஒரு தொடர்பு உள்ளது தெரியவருகிறது. எனவே, இதுகுறித்து விரிவான விசாரணை நடத்தினால்தான் உண்மை தெரியவரும். அதனால், மருத்துவ மேற்படிப்பு மாணவர் சேர்க்கை முறைகேடு குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று கடந்த 2020-ம் ஆண்டு உத்தரவிட்டார்.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனியார் கல்லூரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடத்தாமல் மாணவர் சேர்க்கை நடத்த மருத்துவ மேற்படிப்பு தேர்வு குழுவின் அப்போதைய செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜன்தான் காரணம். அவர் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்த முறைகேடு தொடர்பாக விசாரணை மேற்கொள்ள பல முட்டுக்கட்டை இருந்ததால், வழக்கு கூட பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-

இந்த பிரச்சினைக்கு காரணமான தேர்வுக்குழு அப்போதைய செயலாளர் டாக்டர் ஜி.செல்வராஜனுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற பண பலன்கள் வழங்குவதை தலைமைச்செயலாளர் நிறுத்தி வைக்க வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் இந்த குற்றச்சாட்டு குறித்து பெயர் தெரிந்த அதிகாரிகள் மற்றும் தெரியாதவர்கள், தனியார் மருத்துவக்கல்லூரிகள் ஆகியோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய வேண்டும். பின்னர் மருத்துவக்கல்வி இயக்குனரகம் அதிகாரிகள் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இந்த வழக்கின் விசாரணை அதிகாரியை வேறு இடத்திற்கு டி.ஜி.பி. மாற்றக்கூடாது.

இந்த வழக்கை தொடர்ந்த மருத்துவ மாணவர்களுக்கு தலா ரூ.4 லட்சத்தை, 4 வாரத்துக்குள் அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.

இந்த தொகையை மருத்துவக்கல்வி தேர்வுக்குழு முன்னாள் செயலாளரின் ஓய்வூதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையை மேற்கொண்டு அடுத்தக்கட்ட அறிக்கையை வருகிற ஏப்ரல் 25-ந்தேதி தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்