தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,136 குறைந்தது

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் காரணமாக உயர்ந்த தங்கம் விலை பவுனுக்கு ரூ.1,136 குறைந்தது.

Update: 2022-02-25 23:02 GMT
சென்னை,

தங்கம் விலையில் நிலையற்ற தன்மை காரணமாக ஏற்ற, இறக்கம் நிலவி வந்தது. கடந்த 23-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.4 ஆயிரத்து 719-க்கும், ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 752-க்கும் விற்பனை ஆனது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா தனது தாக்குதலை தொடுத்த மறு கணமே தங்கத்தின் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது.

அதாவது நேற்று முன்தினம் ரூ.232 உயர்ந்து கிராம் ரூ.4 ஆயிரத்து 951-க்கும், ரூ.1,856 உயர்ந்து பவுன் ரூ.39 ஆயிரத்து 608 ஆகவும் விற்பனை ஆனது. இந்த திடீர் விலை உயர்வு பொதுமக்கள் இடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க வேண்டும் என நினைத்தவர்களுக்கு பேரிடியை கொடுப்பதாகவும் அமைந்தது.

வீழ்ச்சி

பங்கு சந்தையில் முதலீடு செய்பவர்கள் தொடர்ந்து அதில் முதலீடு செய்ய தயக்கம் காட்டியதும், தங்கத்தில் முதலீடு செய்ததுமே தங்கத்தின் விலை உயர்வுக்கு பிரதான காரணமாக கூறப்பட்டது. ஆனால் புயலுக்கு பின் அமைதி என்பது போல, தங்கம் விலை ஏறிய வேகத்தில் நேற்று காலை நேர நிலவரப்படி திடீரென வீழ்ச்சியை சந்தித்தது.

நேற்று மாலை நேர நிலவரப்படி ரூ.142 குறைந்து கிராம் ரூ.4 ஆயிரத்து 809-க்கும், ரூ.1,136 குறைந்து பவுன் ரூ.38 ஆயிரத்து 472-க்கும் விற்பனையானது. ஆனால் 23-ந்தேதி நிலவரப்படியிலான விலையை எட்டவில்லை. மாறாக சற்று ஆறுதல் அளிக்கும் வகையில், விலை குறைந்து காணப்பட்டது. தங்கம் விலை முழம் ஏறி ஜான் சறுக்கியது என்றே சொல்லலாம்.

காரணம் என்ன?

இதுகுறித்து சென்னை வைரம் மற்றும் தங்கம் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் ஷலானியிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

உக்ரைன்-ரஷியா இடையேயான போரில், ரஷியாவுக்கு ஆதரவாக சீனாவும், உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈடுபட்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும் என்ற பேச்சு அடிபட்டது. இதனால் பொருளாதாரத்தில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கும் என்று கருதி, பொருளாதார பங்கு சந்தையில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை குறைத்து, தங்கத்தின் மீது முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார்கள். ஆகவே அதன் விலை நேற்று (நேற்று முன்தினம்) அதிகளவில் உயர்ந்து காணப்பட்டது.

ஆனால் எதிர்பார்த்த அளவு இரு நாடுகளுக்கு உதவ உலக நாடுகள் எதுவும் முன்வராததால், பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் நிகழவில்லை. ஆகவே முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்யும் ஆர்வத்தை குறைத்து, மீண்டும் பொருளாதார பங்கு சந்தையில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். அதனால் தங்கம் விலை சற்று குறைந்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலை இருக்கும்போது தங்கம் விலையில் ஏற்றம், இறக்கம் என்பது இருந்து கொண்டே தான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்