புதுச்சேரி மாணவர்களின் பெற்றோர் கண்ணீர்
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
உக்ரைனில் சிக்கி தவிக்கும் புதுச்சேரி மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்தனர்.
8 மாணவர்கள் தவிப்பு
உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் அங்கு படிக்கும் புதுச்சேரி, காரைக்காலை சேர்ந்த 8 பேர் சிக்கி தவித்து வருகிறார்கள். அதாவது நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகர் விஷாலினி, ரெட்டியார்பாளையம் சிவசக்தி நகர் அரவிந்தன், தேவகி நகர் மதன்ராஜ், கதிர்காமம் ராதாகிருஷ்ணன் நகர் அக்ஷயா, காரைக்கால் கோட்டுச்சேரி பிரவீணா, கிளிஞ்சல்மேடு சந்துரு, பி.எஸ்.ஆர்.நகர் கார்த்தி விக்னேஷ், சிவசங்கர் ஆகியோர் தான் அவர்கள் என்ற தகவல் கிடைத்துள்ளது.
உக்ரைனில் பெரும்பாலானோர் உயிருக்கு பயந்து பதுங்கு குழிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். அங்கு புதுவை மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்களா? என்பது குறித்து அங்குள்ள மாணவர்களின் பெற்றோர் தினத்தந்தி நிருபரிடம் கண்ணீர் மல்க கூறினர். அதன் விவரம் வருமாறு:-
மருத்துவ மாணவி
புதுவை நைனார்மண்டபம் கிழக்கு வாசல் நகரை சேர்ந்த மாணவி விஷாலினியின் (வயது 19) தந்தை அண்ணாமலை குமரன், தாயார் தெய்வகுமாரி ஆகியோர் கூறியதாவது:-
உக்ரைன் கார்கிவ் பகுதியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் மருத்துவ படிப்புக்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விஷாலினி சென்றார். அவருக்கு 2-வது செமஸ்டர் தேர்வு நடந்து வந்தது. உக்ரைனில் போர் பதற்றம் காரணமாக இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. உடனே எங்களின் மகளை இந்தியாவுக்கு அழைத்து வர விமான டிக்கெட் புக் செய்தோம். ஆனால் அவருக்கு உடனடியாக டிக்கெட் கிடைக்கவில்லை. எனவே மார்ச் 2-ந் தேதி விமான டிக்கெட் புக் செய்தோம்.
2 நாட்களுக்கு மட்டுமே உணவு...
இந்தநிலையில் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்ததால் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் எனது மகள் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதி பதுங்கு குழியில் தங்க வைக்கப்பட்டு உள்ளார். அவருடன் அடிக்கடி செல்போனில் பேசி வருகிறோம். போர் காரணமாக சிக்னல் கிடைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இருப்பினும் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அவரிடம் பேசி, தைரியம் கொடுத்து வருகிறோம். அவருடன் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தங்கி உள்ளனர். அவர்களுக்கு 2 நாட்களுக்கு மட்டுமே உணவு உள்ளதாக கூறினாள்.
ரஷியா தொடர்ந்து குண்டு மழை பொழிவதாலும், ஏவுகணை வீசுவதாலும் மாணவர்கள் பீதியில் உள்ளனர். உணவு, தங்குமிடம் இல்லாமல் எனது மகளுடன் மற்ற மாணவர்களும் தவித்து வருகிறார்கள்.
மத்திய, மாநில அரசு
இதுதொடர்பாக அரசுக்கு தெரியப்படுத்தி உள்ளோம். எங்களின் மகளை மீட்க மத்திய, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
ரெட்டியார்பாளையம் சிவசக்தி நகரை சேர்ந்த மருத்துவ மாணவர் அரவிந்தனின் தந்தை முருகன்:-
எனது மகன் கடந்த ஆண்டு மருத்துவம் படிக்க உக்ரைன் சென்றார். அங்கு போர் காரணமாக அவரை இந்தியாவுக்கு திரும்ப அழைத்து வர 27-ந் தேதிக்கு விமான டிக்கெட் புக் செய்தோம். ஆனால் போர் காரணமாக விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருக்கிறது.
இதனால் அவர் இந்தியா வருவதில் சிக்கல் நீடிக்கிறது. எனது மகன் கல்லூரியில் உள்ள சுரங்கத்தில் பத்திரமாக தங்க வைக்கப்பட்டுள்ளார். அவருடன் ஏராளமான மாணவர்கள் தங்கி உள்ளனர். அவர்கள் பிஸ்கெட், பிரெட் உள்ளிட்டவற்றை சாப்பிட்டு வருகிறார்கள்.
ரங்கசாமி உறுதி
முத்தியால்பேட்டை தேவகி நகர் மதன்ராஜ் தந்தை கோவிந்தராஜன்:-
உக்ரைனில் மருத்துவம் படிக்க சென்ற மகன் சிக்கி உள்ளார். அவருடன் செல்போன் மூலம் பேசி வருகிறேன். போர் காரணமாக குண்டு மழை, ஏவுகணை வெடித்து சிதறும் சத்தம் கேட்டு பயத்தில் இருக்கிறான். சாப்பாடு இல்லாமல் பிஸ்கெட் மட்டும் தான் சாப்பிடுவதாக தெரிவித்தான். எனது மகனை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர், கலெக்டர் அலுவலகங்களில் மனு அளித்துள்ளேன். முதல்-அமைச்சர் ரங்கசாமி உக்ரைனில் சிக்கி தவிக்கும் மாணவ-மாணவிகளை மீட்க புதுவை அரசு நடவடிக்கைகள் எடுக்கும் என உறுதி அளித்துள்ளார்.