4 மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழப்பு: தமிழகத்தில் 618 பேருக்கு கொரோனா

தமிழகத்தில் 618 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. 4 மாவட்டங்களில் மட்டும் தலா ஒருவர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2022-02-23 23:00 GMT
சென்னை,

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. அந்த வகையில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 62 ஆயிரத்து 549 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 352 ஆண்கள், 266 பெண்கள் என மொத்தம் 618 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

அதிகபட்சமாக சென்னையில் 156 பேரும், கோவையில் 87 பேரும், செங்கல்பட்டில் 72 பேரும், ஈரோட்டில் 27 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூர், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, தேனியில் தலா இருவரும், பெரம்பலூர், ராமநாதபுரம், திருப்பத்தூர், தென்காசியில் தலா ஒருவரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை

இதில் 12 வயதுக்கு உட்பட்ட 52 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் 101 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இதுவரை 6 கோடியே 29 லட்சத்து 14 ஆயிரத்து 934 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, 34 லட்சத்து 47 ஆயிரத்து 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி 1,387 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 675 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகளிலும், 234 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

4 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று 4 பேர் உயிரிழந்து உள்ளனர். இதில் சென்னை, செங்கல்பட்டு, மதுரை, சேலத்தில் தலா ஒருவரும் உயிரிழந்தனர். 34 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் இதுவரை மொத்தம் 37 ஆயிரத்து 993 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர். இத்தொற்று பாதிப்பில் இருந்து நேற்று 2 ஆயிரத்து 153 பேர் ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டு உள்ளனர். சிகிச்சையில் 10 ஆயிரத்து 782 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்