ரெயிலில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பலி

இரணியலில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மகள் கண்முன்னே நடந்தது.

Update: 2022-02-23 19:54 GMT
நாகர்கோவில்:
இரணியலில் ரெயிலில் இருந்து தவறி விழுந்த கொத்தனார் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் மகள் கண்முன்னே நடந்தது.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கொத்தனார்
குழித்துறை அருகே உள்ள பள்ளியாடி பகுதியை சேர்ந்தவர் ரத்தினராஜ் (வயது 49), கொத்தனார். இவருடைய மனைவி ஜெமீலா. இவர்களுக்கு ஆஸ்வின்ராஜ் என்ற மகனும், அன்மரியா என்ற மகளும் உள்ளனர். ஆஸ்வின்ராஜ் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரத்தினராஜ் தனது குடுபத்துடன் கேரள மாநிலம் கண்ணூரில் சொந்தமாக வீடு கட்டி குடியேறினார். 
இந்த நிலையில் உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக ரத்தினராஜ் தனது மனைவி ஜெமீலா மற்றும் மகள் அன்மரியா ஆகியோருடன் பள்ளியாடிக்கு வந்தார். பின்னர் அவர்கள் 3 பேரும் கண்ணூர் செல்ல திட்டமிட்டனர். 
தந்தை- மகள் புறப்பட்டனர்
ஆனால் ஜெமீலாவுக்கு சற்று உடல்நிலை பாதிக்கப்பட்டதன் காரணமாக அவர் பள்ளியாடியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். இதனைதொடர்ந்து நேற்று அதிகாலை ரத்தினராஜ், மகள் அன்மரியா ஆகியோர் கண்ணூருக்கு புறப்பட்டனர். இதற்காக அவர்கள் அதிகாலை 4 மணிக்கு இரணியல் ரெயில் நிலையத்துக்கு வந்தனர். 
அப்போது நாகர்கோவிலில் இருந்து மங்களூரு செல்லும் பரசுராம் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்தது. அதிகாலை நேரம் என்பதால் ரெயில் நிலையத்திலும், ரெயிலிலும் பயணிகள் கூட்டம் அதிகமாக இல்லை.  இரணியல் ரெயில் நிலையத்தில் ரெயில் நின்றபோது, முதலில் மகள் அன்மரியா ஏறினார். பின்னர் அவர்கள் கொண்டு வந்த உடமைகளை பிளாட்பாரத்தில் இருந்தபடி ரத்தினராஜ் ரெயிலில் ஏற்றினார். அதற்குள் ரெயில் புறப்பட்டது. 
தவறி விழுந்து சாவு
அப்போது ரெயிலில் ஏற முயன்ற ரத்தினராஜ், எதிர்பாராதவிதமாக படிக்கட்டில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் அவர் பிளாட்பாரத்திற்கும், ரெயிலுக்கும் நடுவே சிக்கி உடல் நசுங்கி மகளின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைதொடர்ந்து அங்கிருந்த பயணிகள் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் பிளாட்பாரத்தில் குவிந்தனர். இதுபற்றி நாகர்கோவில் ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாபு, குமார்ராஜ் மற்றும் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மகள் கண்முன்னே...
இதற்கிடையே ரெயிலில் சென்ற அன்மரியாவை குழித்துறை ரெயில் நிலையத்தில் வைத்து போலீசார் மீட்டனர். பின்னர் அவரை பள்ளியாடியில் உள்ள உறவினர் வீட்டுக்கு அழைத்து சென்றார்கள். மகள் கண்முன்னே தந்தை ரெயிலில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் உறவினர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்