நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: காலை 8 மணிக்கு தொடங்குகிறது வாக்கு எண்ணிக்கை; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்!

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளின் ஓட்டு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது.

Update: 2022-02-22 02:03 GMT
சென்னை,

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 19-ந் தேதி நடைபெற்றது.21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடந்தது.வாக்குப்பதிவு முடிவில் 61 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.முறைகேடு புகார் காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களில் 7 வாக்குச்சாவடிகளில் நேற்று மறு வாக்குப்பதிவு நடந்தது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்குகிறது. தமிழகம் முழுவதும் 279 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் செல்ல தேர்தல் ஆணையம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதன்படி, கொரோனா விதிமுறைகள் கட்டாயம் பின்பற்றப்படும், செல்போன், கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை என்று தெரிவித்துள்ளது.

8 முதல் 14 மேஜைகள்

தடையில்லா மின்சாரம், கணினி வசதி, உணவு மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் வாக்கு எண்ணும் மையத்தில் செய்யப்பட்டுள்ளன.வாக்கு எண்ணும் மையங்களில் 8 முதல் 14 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை பொறுத்து இந்த மேஜைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. வார்டு வாரியாக ஓட்டுகள் எண்ணப்படுகின்றன.

வாக்குகள் எண்ணப்படும் இடத்திற்குள் வேட்பாளர்கள், அவர்களது தலைமை முகவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வேட்பாளரின் தலைமை முகவர் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்போன் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை உள்ளவர்கள் மட்டும் வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். தபால் ஓட்டுகளை பிரித்து யாருக்கு வாக்களிக்கப்பட்டுள்ளது என்பது அனைத்து முகவர்களுக்கும் தெரியும் வகையில் காண்பிக்கப்படும். இதன்பின்பு, யாருக்கு அந்த ஓட்டு பதிவாகி உள்ளதோ அவரது கணக்கில் அந்த வாக்கு சேர்க்கப்படும்.

இதன்பின்பு வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறையில் இருந்து வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டுவரப்படும்.ஒரே நேரத்தில் அதிகபட்சமாக 14 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் எடுத்து வரப்பட்டு 14 மேஜைகளில் வைக்கப்படும்.பின்னர் கன்ட்ரோல் யூனிட்டில் இருக்கும் ‘சீல்' வேட்பாளர்கள் முன்னிலையில் உடைக்கப்படும். இதைத்தொடர்ந்து கன்ட்ரோல் யூனிட்டில் சின்னம் வாரியாக பதிவான வாக்குகள் சேகரிக்கப்படும்.

இதுவே, ஒரு சுற்று வாக்கு எண்ணிக்கையாக கருதப்படும். மாநகராட்சி, நகராட்சியை பொறுத்தமட்டில் பெரும்பாலான வார்டுகளுக்கான தேர்தல் 40-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் நடைபெற்றதால் அதிகபட்சமாக 4 சுற்றுகள் வரை ஓட்டுகள் எண்ணப்பட்டு இறுதி முடிவுகள் அறிவிக்கப்படும்.

பேரூராட்சி வார்டுகளை பொறுத்தமட்டில் ஒரு வார்டுக்கு 10 முதல் 20 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்றதால் ஓரிரு சுற்றுகளில் முடிவுகள் வெளியிடப்படும். இதுபோன்று ஒவ்வொரு வார்டாக ஓட்டுகள் எண்ணப்படும்.

10 மணி முதல் முடிவுகள்

வாக்கு எண்ணிக்கை முழுமையாக வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யப்படும். ஒவ்வொரு சுற்று முடிவு விவரம் வாக்கு எண்ணும் மையத்துக்கு வெளியில் உள்ள அறிவிப்பு பலகையில் ஓட்டப்படும். மேலும், ஒலி பெருக்கி மூலமும் அறிவிக்கப்படும்.தபால் வாக்குகளை பொறுத்தமட்டில் ஒவ்வொரு வார்டிலும் குறைவான எண்ணிக்கையிலே இருக்கும் என்பதால் காலை 8.30 மணியில் இருந்து 9 மணிக்குள் எண்ணி முடிக்கப்பட்டு விடும்.

முதல் சுற்று முடிவு, முன்னணி நிலவரம் காலை 10 மணி முதல் தெரியவரும். அதேவேளையில் காலை 11 மணி முதல் வெற்றி பெற்றவர்கள் விவரம் ஒவ்வொன்றாக தெரிந்து விடும்.

மேலும் செய்திகள்