வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதி

வேட்பாளர்களின் முகவர்கள் அடையாள அட்டை இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட தேர்தல் அதிகாரி ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-21 19:49 GMT
சென்னை,

பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 வார்டுகளுக்கான தேர்தல் கடந்த 19-ந்தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 43.65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. பதிவான வாக்குகள் கொண்ட வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சென்னையில் உள்ள 15 வாக்கு எண்ணும் மையங்களில் உள்ள அறையில் வைத்து ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளன.

இந்த மையங்களுக்கு 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் வாக்குகளை எண்ணும் பணி இன்று நடக்கிறது. இந்த பணிக்கு 2,400 ஊழியர்கள் பயன்படுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கான பயிற்சி வகுப்பு சென்னையில் 3 இடங்களில் நேற்று நடைபெற்றது. சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற இந்த பயிற்சி வகுப்பில் கலந்துகொண்ட ஊழியர்களுக்கு பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ககன்தீப் சிங் பேடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தபால் ஓட்டு

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கான பதியப்பட்டுள்ள வாக்குகள் 15 இடங்களில் எண்ணப்பட உள்ளது. அந்த மையங்களுக்கு தேவையான அளவு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாக்கு எண்ண தேவையான பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கையில் முதல் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். இதுவரை சென்னை மாநகராட்சி தேர்தல் பணியில் ஈடுபடும் 16 ஆயிரத்து 657 ஊழியர்களுக்கு தபால் மூலம் வாக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு உள்ளது. ஓட்டு எண்ணிக்கையின் முடிவுகள் வார்டு வாரியாக எண்ணப்பட்டு அறிவிக்கப்படும். முதல் சுற்று முடிவு மற்றும் முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரியவரும். பிற்பகல் 3 மணிக்கு முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அடையாள அட்டை

வாக்கு எண்ணும் மையங்களுக்கு வேட்பாளர்களின் முகவர்கள் உள்ளிட்ட அனைவரும் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள அடையாள அட்டையுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணும் மையங்களில் வேட்பாளர்களின் முகவர்கள் செல்போன்கள் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டு உள்ளது. பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு எந்திரங்கள் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் வார்டு மற்றும் வாக்குச்சாவடிகள் வாரியாக ‘சீல்’ உடைக்கப்பட்டு அதில் உள்ள வாக்குகள் எண்ணப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்