அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைனில் தேர்வு நடத்தக்கோரி அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை மறியல் செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஆன்லைனில் தேர்வு
தவளக்குப்பத்தில் ராஜீவ்காந்தி அரசு கலை, அறிவியல் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 900-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் ஆன்லைன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தேர்வுகளும் ஆன்லைன் வழியாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் தற்போது கல்லூரிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து வருகிறது. மேலும் தேர்வுகளும் நேரடியாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாணவர்கள் போராட்டம்
ஆன்லைனில் பாடங்கள் நடத்தி விட்டு தேர்வுகள் மட்டும் நேரடியாக நடத்துவதற்கு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே ஆன்லைன் தேர்வு நடத்தக்கோரி இன்று கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சாலை மறியலில் ஈடுபட புறப்பட்டு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தவளக்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தினர். இருப்பினும் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. கல்லூரி முன் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரியில் பல்வேறு கல்லூரிகளிலும் மாணவர்கள் ஆன்லைன் வழியாக தேர்வு நடத்த வேண்டும் என்று கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.