கூரியர் நிறுவன ஊழியர் பாட்டிலால் குத்திக் கொலை

வில்லியனூர் அருகே சாராயம் வாங்க பணம் கொடுக்காததால் கூரியர் நிறுவன ஊழியர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.

Update: 2022-02-21 17:30 GMT
வில்லியனூர் அருகே சாராயம் வாங்க பணம் கொடுக்காததால் கூரியர் நிறுவன ஊழியர் பாட்டிலால் குத்தி படுகொலை செய்யப்பட்டார்.
கூரியர் நிறுவன ஊழியர்
வில்லியனூரை அடுத்த அரும்பார்த்தபுரம் புதுநகரை சேர்ந்தவர் சீனிவாசன் என்ற மூர்த்தி (வயது 31). புதுச்சேரியில் உள்ள ஒரு கூரியர் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு ஹேமா என்பவருடன் திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.
இந்தநிலையில் இன்று வீட்டில் இருந்து வெளியே சென்ற சீனிவாசன் இரவு நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ரத்த காயங்களுடன்...
இதற்கிடையே இன்று காலை வில்லியனூர் பத்துக்கண்ணு மெயின்ரோடு சேந்தநத்தம் சுடுகாடு அருகே வாலிபர் ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை அந்த வழியாக சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் உடனடியாக வில்லியனூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
மேற்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் உத்தரவின் பேரில் வில்லியனூர் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
படுகொலை
அப்போது இறந்து கிடந்தவர் சீனிவாசன் என்பதும், சாராய பாட்டிலால் மார்பு, கழுத்து பகுதியில் குத்தி படுகொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது. இறந்தது சீனிவாசன் தான் என்பதை உறவினர்கள் மூலம் உறுதிப்படுத்தினர்.
இதையடுத்து அவரது உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை      நடத்தி  வருகின்ற னர். இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க 3 தனிப் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.
பணம் கேட்டு தகராறு
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள சாராய கடைக்கு சீனிவாசன் சாராயம் வாங்க சென்றுள்ளார். அப்போது அவர் சாராயம் வாங்குவதற்காக ரூ.500 கொடுத்துள்ளார்.  இதை சேந்த நத்தம் பகுதியை சேர்ந்த சஞ்சீவ் (25), புகழ் (24) ஆகியோர் பார்த்துள்ளனர். பணம் அவரிடம் நிறைய இருப்பதாக இருவரும் எண்ணினர்.
பின்னர் சீனிவாசனிடம் நைசாக 2 பேரும் பேச்சு கொடுத்து அழைத்து சென்றனர். அங்குள்ள சுடுகாடு அருகே அமர்ந்து 3 பேரும் சாராயம் குடித்தனர். போதை தலைக்கேறியதும்      அவர் களுக்கு    இடையே  வாக்கு வாதம் ஏற்பட்டது. சாராயம் காலியானதால் 2 பேரும் மீண்டும் சாராயம் வாங்க பணம் கேட்டு சீனிவாசனிடம் தகராறு செய்தனர். அவர் பணம் கொடுக்க மறுக்கவே, 2 பேரும் ஆத்திரம் அடைந்து அங்கு கிடந்த சாராய பாட்டிலை எடுத்து உடைத்து சீனிவாசனின் கழுத்து, மார்பு உள்ளிட்ட இடங்களில் குத்திக்கொலை செய்துள்ளனர். மேலும் அவர் வைத்திருந்த ரூ.2,300-ஐ எடுத்து கொண்டு தப்பி சென்றது தெரியவந்தது.
கைது
இதற்கிடையே சஞ்சீவின் செல்போன் எண்ணை வைத்து போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது அவர் வில்லியனூர் ரெயில்நிலையம் பகுதியில் சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சாராயம் வாங்க பணம் தராததால் கொலை செய்ததாக அவர் ஒப்புக்கொண்டார். மேலும் தலை மறைவாக உள்ள அவரது கூட்டாளி புகழை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
சாராயம் வாங்க பணம் கொடுக்காததால் கூரியர் நிறுவன ஊழியர் பீர் பாட்டிலால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் வில்லியனூர் பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்