விடுதலைப் போராட்ட அலங்கார ஊர்தி குறித்து முதல்வர் எடுத்த நிலைக்கு மக்களிடையே மிகப்பெரிய ஆதரவு: கே.எஸ்.அழகிரி

இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த அலங்கார ஊர்திகளை சென்னை மாநகர மக்கள் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி வரை பெருந்திரளாக வருகை புரிந்து பார்வையிட்டு மகிழ வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்வதாக கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Update: 2022-02-21 11:58 GMT
இந்தியாவின் 75-வது குடியரசு தின கொண்டாட்டத்தின் போது, தலைநகர் தில்லியில் நடைபெற்ற அணிவகுப்பில் இடம்பெறுவதற்காக தமிழ் நாடு அரசின் சார்பில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தியில், இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்ற மருது சகோதரர்களும், ராணி வேலு நாச்சியாரும், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யும், மகாகவி பாரதியாரும்தான் இடம்பெற்றிருந்தார்கள். இவர்கள் அனைவரும் விடுதலைப் போராட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை எதிர்த்து கடுமையாகப் போராடியவர்கள். இவர்களது தியாகத்தை நினைவுகூறும் அலங்கார ஊர்திகளை தலைநகர் தில்லியில் நடைபெறும் அணிவகுப்பில் இடம்பெற மறுத்து பாரபட்சமான நடவடிக்கையை மத்திய பா.ஜ.க. அரசு கையாண்டது.

இந்நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எடுத்த முடிவின்படி தில்லி அணிவகுப்பில் மறுக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் சென்னையில் நடைபெற்ற, குடியரசு தினக் கொண்டாட்டத்தில் அணிவகுத்தது, அனைவரது கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. அந்த அலங்கார ஊர்திகள் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு பொதுமக்களின் பார்வைக்காக அனுப்பப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

தற்போது அந்த அலங்கார ஊர்திகள் சென்னை கடற்கரை காமராஜர் சாலையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழக அமைச்சர்கள் பொதுமக்கள் பார்வைக்குத் தொடங்கி வைத்துள்ளனர். இந்திய விடுதலைப் போராட்டத்தின் வரலாற்றைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள அந்த அலங்கார ஊர்திகளை சென்னை மாநகர மக்கள் வருகிற பிப்ரவரி 23ஆம் தேதி வரை பெருந்திரளாக வருகை புரிந்து பார்வையிட்டு மகிழ வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்கிறேன். 

இதன்மூலம் மத்திய அரசால் மறுக்கப்பட்ட விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவடுகளைத் தாங்கிய அலங்கார ஊர்திகளுக்கு சென்னை மாநகர மக்களிடையே அமோக வரவேற்பும் ஆதரவும் பெற்றது என்ற செய்தி நாடு முழுவதும் பரவட்டும். அதன்மூலம் தமிழக முதலமைச்சர் எடுத்த நிலைக்கு மிகப்பெரிய ஆதரவு இருந்தது என்பதை உறுதிசெய்ய வேண்டுமென அன்போடு கேட்டுக் கொள்வதாக கே.எஸ். அழகிரி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் செய்திகள்