வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்க எதிர் கட்சிகள் சதி - அமைச்சர் குற்றச்சாட்டு
வாக்கு எண்ணிக்கை மையத்தில் வன்முறை, கலவரத்தை தூண்டிவிட எதிர்க்கட்சிகள் முன்னேற்பாடு செய்துள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
பீளமேடு:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை நடக்கிறது. இதனையொட்டி தி.மு.க. முகவர்கள் ஆலோசனை கூட்டம் கோவை காளப்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.
கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் செந்தில் பாலாஜி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. கோவையில் வாக்கு எண்ணிக்கையை சீர்குலைப்பதற்கும், வன்முறை மற்றும் கலவரத்தை தூண்டுவதற்கும் எதிர்கட்சியினர் முயற்சி செய்கின்றனர்.
எந்தவிதமான வன்முறை மற்றும் கலவரம் நடந்தாலும் வாக்கு எண்ணும் மையத்தில் பொறுமையுடன் செயல்பட கட்சியினருக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். மேலும் வன்முறை நடந்தாலும் வாக்கு எண்ணிக்கையில் முகவர்கள் விழிப்புணர்வுடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்குபதிவு தினத்தில் அ.தி.முக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு பதிவு மையம் சென்றனர். இது சட்டத்திற்குப் புறம்பான செயல். அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்குள் சென்றது குறித்து தி.மு.க. சார்பில் அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ள நிலையில் தனியார் மண்டபத்தில் நேற்று அ.தி.மு.க.வினர் ரகசிய கூட்டம் நடத்தியுள்ளனர். அந்த கூட்டத்தில் கலந்து கொண்டவர்களை செல்போனை வெளியில் வைத்துவிட்டு வர சொல்லி இருக்கிறார்கள். மேலும் தாங்கள் பேசும் போது பக்கத்தில் கட்சிக்காரர்கள் தான் உள்ளார்களா என்பதையும் பார்த்து பார்த்து பேசியுள்ளனர்.
ஒவ்வொரு வாக்கு எண்ணிக்கை மையத்திற்கும் அ.தி.மு.க.வினர் 100 பேர் வர வேண்டும் என்றும், ஆயிரக்கணக்கில் அ.தி.மு.கவினரை வரவழைத்து வன்முறையை கட்டவிழத்து விட திட்டமிட்டு இருக்கின்றனர்.
சிறு, சிறு சம்பவங்கள் கூட இல்லாமல் அமைதியாக தேர்தல் நடைபெற்றது. அதுபோன்று வாக்கு எண்ணிக்கையும் அமைதியாக நடைபெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.