தேர்தலுக்காக கொரோனா பாதிப்பை குறைத்து காட்டவில்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தேர்தலுக்காக கொரோனா பாதிப்பை குறைத்து காட்டவில்லை என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

Update: 2022-02-21 07:22 GMT
கோப்புப் படம்
சென்னை,

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனாவின் 3-வது அலை பரவத் தொடங்கியது. தொடர்ந்து அதிகரித்து வந்த கொரோனா பாதிப்பு ஜனவரியில் உச்சம் தொட்டது. தினசரி 30 ஆயிரம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கி உள்ளது. நேற்று தமிழகத்தில் 1000 பேருக்கும் குறைவாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சென்னை அரும்பாக்கத்தில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்ரமணியன் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தலுக்காக கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை குறைத்து காட்டவில்லை, அப்படி காட்டவும் முடியாது என்று கூறினார்.

மேலும் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 1000-க்கும் கீழ் குறைந்துள்ளது. எனினும் மக்கள் தடுப்பூசி செலுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். தமிழகத்தில் இதுவரை 92 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். ஆனால், அவர்களில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் 2-ம் தவணை தடுப்பூசி உரிய நேரத்தில் செலுத்தவில்லை என்று கூறினார்.

மேலும் செய்திகள்