பெர்சியன் ரக பூனையை திருடிய மர்ம ஆசாமிகள்

விஜய் படம் மூலம் பிரபலமான பெர்சியன் ரக பூனையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். போலீசில் புகார் செய்ததால் மீண்டும் கடையில் விட்டு சென்றனர்.

Update: 2022-02-20 18:20 GMT
விஜய் படம் மூலம் பிரபலமான பெர்சியன் ரக பூனையை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். போலீசில் புகார் செய்ததால் மீண்டும் கடையில் விட்டு சென்றனர். 
பெர்சியன் ரக பூனை
மாஸ்டர் திரைப்படத்தில் நடிகர் விஜய் தனது வீட்டில் பெர்சியன் ரக பூனை ஒன்றை வளர்த்து வருவார். ஐரோப்பிய நாடுகளில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் வளர்க்கப்படும் பெர்சியன் ரக பூனைக்கு எப்போதும் மவுசு அதிகம். இந்த வகை பூனை தற்போது புதுவையில் திருட்டு போய் உள்ளது. அதன் விவரம் வருமாறு:-
 முத்தியால்பேட்டை        மணிக்கூண்டு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார். வண்ண மீன்கள் மற்றும் வீட்டு பிராணிகளை விற்பனை செய்து வருகிறார்.  இவர் கடந்த 3 ஆண்டுகளாக பெர்சியன் ரக பூனையை வளர்த்து வருகிறார். அந்த பூனை இவரது வீடு, கடையில் சுதந்திரமாக சுற்றி வரும்.
கண்காணிப்பு கேமரா ஆய்வு
இந்த    நிலையில்  கடந்த 18-ந் தேதி இவரது   கடைக்கு 3 பேர்    ஒரு  மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் அங்கு வளர்க்கப்படும் புறா, வண்ண மீன்கள் குறித்து விசாரித்தனர். அப்போது அங்கு நின்று கொண்டு இருந்த பெர்சியன் ரக பூனையுடன் விளையாடினர்.
பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் பெர்சியன் ரக பூனையை காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயக்குமார், தனது கடையில் உள்ள கண்காணிப்பு  கேமராவை ஆய்வு செய்தார்.
போலீசார் விசாரணை
அப்போது கடைக்கு வந்த மர்ம ஆசாமிகள் 3 பேர் ஜெயக்குமாரின் கவனத்தை திசை திருப்பி பெர்சியன் ரக பூனையை திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அவர் முத்தியால்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.
போலீசார் விசாரணை நடத்துவதை அறிந்த மர்ம ஆசாமிகள் இன்று மதியம் அந்த பூனையை கடையில் விட்டு விட்டு தப்பி சென்றனர். இதுதொடர்பாக போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்