தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் விபத்தில் பலி
தேர்தல் பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழந்து உள்ளார்.
பெருந்துறை,
ஈரோடு மாவட்டம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியம்(வயது58). இவர் மருத்துவமனை அவுட் போஸ்ட் போலீஸ் நிலையத்தில் சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகின்றார்.
சுப்பிரமணியத்துக்கு கலைச்செல்வி(50) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
இந்த நிலையில் சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியம் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு நேற்று நள்ளிரவில் தனது இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். சின்னியம்பாளையம் அருகே வந்தபோது இரு சக்கர வாகனத்தில் இருந்து நிலை தடுமாறி சாலையோரத்தில் விழுந்துள்ளார்.
இந்த விபத்தில் சுப்பிரமணியத்தின் தலை கல்லில் அடித்து உள்ளது. அதில் தலையில் பலத்த காயமடைந்த சுப்பிரமணியம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து உள்ளார்.
இரவு நேரம் என்பதால் இதனை யாரும் பார்க்கவில்லை. பின்னர் இன்று காலை அந்த வழியா சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த காஞ்சிக்கோவில் போலீசார் உயிரிழந்த சுப்பிரமணியத்தின் உடலை கைப்பற்றி ஈரோடு அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குபதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.