கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு, சிறப்பு பிரிவு கலந்தாய்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சென்னை,
கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் 24 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாளில் பி.வி.எஸ்சி., படிப்புகளில் 7.5 சதவீத அரசு சிறப்பு இட ஒதுக்கீட்டில் சேரும் மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.
அதைத் தொடர்ந்து 25 ஆம் தேதி சிறப்பு பிரிவு மாணவர்கள், குறிப்பாக விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகியோருக்கு கலந்தாய்வு நடைபெறும். கால்நடை மருத்துவ படிப்புகளுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு பிப்ரவரி 28 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 28 ஆம் தேதி பொதுப்பிரிவு கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்கள் கலந்தாய்வுக்கு பதிவு செய்தல், கல்லூரி மற்றும் விருப்பப்பட்ட பாடப்பிரிவுகளை தேர்வு செய்தல் ஆகியவற்றை மார்ச் 3 ஆம் தேதி மாலை 5 மணி வரை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கூடுதல் விவரங்களை www.tanuvas.ac.in என்ற இணையதள முகவரியில் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.