போராட்டம் நடத்திய மாணவர்களை சிறையில் சந்தித்த அரசு டாக்டர் பணியிடை நீக்கம்

தஞ்சை மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் வீட்டின் முன்பு போராட்டம் நடத்திய மாணவர்களை சிறையில் சந்தித்த அரசு டாக்கர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்

Update: 2022-02-18 05:15 GMT
சென்னை,

தஞ்சாவூர் மாவட்டம் மைக்கேல்பட்டியில் உள்ள தூய இருதய மேல்நிலை பள்ளியில் படித்த அரியலூரை சேர்ந்த மாணவி லாவண்யா (வயது 17), கடந்த சில நாட்களுக்கு முன்பு பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்தநிலையில், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகம் மதம் மாறும்படி கட்டாயப்படுத்தியதால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு மாணவி தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்தது.

இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி அகில இந்திய வித்தியார்த்தி பரிசத் என்ற ஏ.பி.வி.பி. மாணவ அமைப்பினர், மாணவி லாவண்யா விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் வீட்டின் முன் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ அமைப்பினரை கைது செய்து போலீசார் புழல் சிறையில் அடைத்தனர்.

அவர்களை சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரியின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு டாக்டர் சுப்பையா, சிறைக்கு சென்று சந்தித்துள்ளார். இது அரசு ஊழியருக்கான ஒழுங்கு நடத்தை விதிமுறைகளை மீறிய செயல் எனப் புகார் எழுந்தது.

அதன் அடிப்படையில் சுப்பையாவை பணியிடை நீக்கம் செய்து மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயணபாபு உத்தரவிட்டு உள்ளார். மேலும் துறை ரீதியான விசாரணை நடந்து வருவதால் மறு அறிவிப்பு வரை இந்த உத்தரவு பொருந்தும் என மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.

டாக்டர் சுப்பையா 2017 முதல் 2020-ம் ஆண்டு வரை ஏ.பி.வி.பி.யின் தேசிய தலைவராக இருந்துள்ளார். தற்போது மதுரை எய்ம்ஸ் ஆஸ்பத்திரியின் உறுப்பினராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

மேலும் செய்திகள்