காரைக்கால் அரசு கல்லூரி மாணவர்கள் போராட்டம்
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி காரைக்கால் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரி காரைக்கால் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆன்லைன் தேர்வு
கொரோனா பரவல் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு வகுப்புகள் அனைத்தும் ஆன்லைனில் நடைபெற்றது. தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் புதுச்சேரியில் கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன.
இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள கல்லூரிகளில், இறுதி செமஸ்டர் தேர்வை தவிர மற்ற அனைத்து தேர்வுகளையும் ஆன்லைனில் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. எனவே தமிழக அரசின் பாடநூல் மற்றும் விதிமுறைகளை பின்பற்றும் புதுச்சேரி அரசு இதுவரை நடைபெற்ற 4 செமஸ்டர் தேர்வுகளில் ஒன்றை மட்டும் நேரடியாக நடத்தியுள்ளது. மற்ற 3 செமஸ்டர் தேர்வுகளையும் மாணவர்கள் ஆன்லைனில் எழுதியுள்ளனர்.
உள்ளிருப்பு போராட்டம்
தற்போது நடைபெற இருக்கிற 5-வது செமஸ்டர் தேர்வையும் ஆன்லைனில் நடத்த புதுச்சேரி மாணவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதை வலியுறுத்தி புதுச்சேரி தாகூர் அரசு கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு ஆதரவாகவும், செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்த கோரியும் காரைக்கால் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால் கல்லூரி வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.