தஞ்சாவூர்: பிரசாரத்தின் போது மயங்கி விழுந்து பெண் வேட்பாளர் உயிரிழப்பு...!
தஞ்சாவூரில் பிரசாரத்தின் போது மயங்கி விழுந்து திமுக வேட்பாளர் அனுசியா பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தஞ்சாவூர்,
தமிழகத்தில் ஒரே கட்டமாக வருகிற 19-ந் தேதி (சனிக்கிழமை) நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் பிரசாரம் இன்றுடன் முடிய உள்ள நிலையில் தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். வேட்பாளர்களும் வீடு வீடாக ஓட்டு வேட்டையாடி வருகிறார்கள்.
அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தாலுகா அய்யம்பேட்டை பேரூராட்சியின் 9-வது வார்டில் திமுக சார்பில் அனுசியா என்பவர் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடையும் நிலையில், திமுக வேட்பாளர் அனுசியா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அய்யம்பேட்டை பேரூராட்சி பெரிய செட்டியார் தெருவில் வாக்குசேகரிப்பின் போது வேட்பாளர் அனுசியா திடீரென மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்த திமுகவினர் அனுசியாவை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் இவர் உயிரிழந்த செய்தி உடனே மாவட்ட ஆட்சிதலைவருக்கு தெரிவிக்கப்பட்டது.
வேட்பாளர் உயிரிழந்ததால் அய்யம்பேட்டை பேரூராட்சி 9-வது வார்டில் தேர்தல் நிறுத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
வாக்கு சேகரிப்பின்போது மயங்கி விழுந்து திமுக வேட்பாளர் அனுசியா உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
#BREAKING || பிரசாரத்தின் போது மயங்கி விழுந்து திமுக வேட்பாளர் மரணம்#DMK | #Thanjavurhttps://t.co/glmkOzMtQp
— Thanthi TV (@ThanthiTV) February 17, 2022