தென் மாவட்ட பயணிகள் ரெயில்களை முன்புபோல இயக்க வேண்டும்-சரத்குமார் வலியுறுத்தல்

தென் மாவட்ட பயணிகள் ரெயில்களை முன்புபோல இயக்க வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2022-02-16 06:10 GMT
சென்னை

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் ரா.சரத்குமார்  வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு கூடுதல் தளர்வுகள் அளிக்கப்பட்டு, சென்னை புறநகர் ரயில்கள் அனைத்தும் இயக்கப்படும் நிலையில், தென்மாவட்ட பயணியர் ரயில்கள் முன்புபோல இயக்கப்படாமல் இருப்பதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழுகிறது.

திருநெல்வேலி - திருச்செந்தூர், திருநெல்வேலி – செங்கோட்டை, திருநெல்வேலி - தூத்துக்குடி, மதுரை - செங்கோட்டை, மதுரை – ராமேஸ்வரம், மதுரை – திண்டுக்கல் உள்ளிட்ட அனைத்து தென்மாவட்ட பயணியர் ரயில்களும் முழுமையாக இயக்கப்படாமல் இருப்பதை அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். 

பயணிகள் ரயில்கள் இயக்கப்படாமல் இருப்பதால் பணிக்கு செல்வோரும், பொதுமக்களும் கடும் சிரமம் அடைவதை கருத்தில் கொண்டு மத்திய , மாநில அரசுகள் தென் மாவட்ட பயணிகள் ரயில்களை முன்பு போல இயக்க அனுமதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், தென்மாவட்ட ரயில்கள் சென்னை வரும்போது சென்னையின் முக்கிய ரயில் நிலையமான மாம்பலம் ரயில்நிலையத்தில் நின்று செல்கிறது. ஆனால், சென்னையிலிருந்து, தென் மாவட்டங்களுக்கு புறப்படும் விரைவு ரயில்கள், சிறப்பு ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதில்லை.

சென்னை பெருநகர விரிவாக்கத்தால், சாலை மார்க்கமான பயணங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களை தவிர்த்து, மக்களின் பொருளாதார நிலைக்கேற்ற வசதியான பயணமாக வெளியூர் பயணம் அமைவதற்கு, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ரயில்கள் மாம்பலம் ரயில் நிலையத்தில் நின்று செல்வதற்கு மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும் என அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறேன் என கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்