தமிழகத்தில் இதுவரை ரூ.9.28 கோடி பறிமுதல் - மாநில தேர்தல் ஆணையம் தகவல்

தமிழகத்தில் இதுவரை 9 கோடி ரூபாய் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக, மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Update: 2022-02-16 03:33 GMT
சென்னை,

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சார பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில், மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. 

அதன் ஒரு பகுதியாக, பணப்பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில், தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் போது முறையான ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர். ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவை ஒப்படைக்கப்படுகின்றன.

அந்த வகையில் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் இந்த மாதம் 10 ஆம் தேதி வரை, 6 கோடியே 89 கோடி ரூபாய் பணம், ஒரு கோடியே 37 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒட்டுமொத்தமாக, இதுவரை 9 கோடியே 28 லட்சம் மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்