தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை: டாக்டர் ராதாகிருஷ்ணன்

அரசு நிர்ணயம் செய்ததைவிட தனியார் மருத்துவ கல்லூரிகள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாக்டர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-02-15 18:09 GMT
கொரோனா தொடர்ந்து குறையும்

தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் அனைத்து மருத்துவ கல்லூரிகளும் தொடங்கப்பட்ட நிலையில் சென்னை மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் நேற்று தொடங்கப்பட்டது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார். பின்னர் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

அரசு நிர்ணயித்த கட்டணத்தை மீறி, தனியார் மருத்துவ கல்லூரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதனை கண்காணிக்க தனி குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணம் குறித்த புகார் தெரிவிக்க தனி தொலைபேசி எண் அறிவிக்கப்பட உள்ளது. கொரோனாவை பொறுத்தவரை தொடர்ந்து நல்ல செய்திகளே வந்து கொண்டிருக்கிறது. கொரோனா தானாக உயர்ந்து தானாக குறையவில்லை. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தொடர்ந்து பின்பற்றிய காரணத்தால்தான் கொரோனா தொற்று குறைந்துள்ளது. அதற்கு முழுமையான எடுத்துக்காட்டாக ஆஸ்பத்திரிகளில் படுக்கைகளின் நிலைமையை கூறலாம்.

சவாலாக உள்ளது

கொரோனாவுக்காக ஒதுக்கப்பட்ட 1 லட்சத்து 30 ஆயிரம் படுக்கைகளில் 2 ஆயிரத்து 800 பேர் மட்டுமே உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பவர்களின் எண்ணிக்கையும் 440 ஆக குறைந்துள்ளது. அதாவது 4 சதவீத நோயாளிகள் மட்டுமே தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். ஆக்சிஜன் உதவியுடன் 1,219 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இதைத்தவிர இதர தொற்றுகளையும் கட்டுப்படுத்தும் பணியையும் செய்து கொண்டிருக்கிறோம்.

நாள் ஒன்றுக்கு 1 லட்சம் பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள சவாலாக உள்ளது என்று பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. எனவே, இனி வரும் காலத்தில் அறிகுறி இருப்பவர்கள், தொற்று கண்டறியப்பட்டவரின் உடன் இருப்பவர்கள் மற்றும் தொடர்பில் இருப்பவர்கள், சுவாசப் பிரச்சினையுடன் வருபவர்கள், கூட்டம் சேரும் இடங்களில் உத்தேச அடிப்படையிலும் கட்டாயம் பரிசோதனை மேற்கொள்ள சுகாதார அலுவலர்களுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.

தடுப்பூசி செலுத்தவில்லை

3-வது அலையில் இறப்பு விகிதம் 10 மடங்கு குறைந்துள்ளது. நோய் தொற்று உள்ளவர்களும் ஆஸ்பத்திரிக்கு வந்த நிலைமையும் மிகவும் குறைந்துள்ளது. தமிழகத்தில் இன்னும் 1.13 கோடி பேர் 2-வது தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருக்கின்றனர்.

தமிழகத்தில் கர்ப்பிணி பெண்கள் 6.37 லட்சம் பேரும், பாலூட்டும் தாய்மார்கள் 5.05 லட்சம் பேரும், மாற்றுத்திறனாளில் 3.74 லட்சம் பேரும், 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் 27.18 லட்சம் பேரும் தடுப்பூசி போட்டுள்ளனர். 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 40 லட்சம் பேர் இன்னும் முதல் தவணை தடுப்பூசி கூட போட்டுக்கொள்ளவில்லை. இவர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் சமுதாயத்தில் நல்ல நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி இருக்கும். 87 சதவீதம் பேருக்கு தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகி உள்ளது.

மையங்கள் குறைப்பு

தமிழகத்தில் அடுத்த 15 நாட்களுக்குள் ஆய்வு மேற்கொண்டு, தேவையில்லாத கொரோனா கவனிப்பு மையங்கள் படிப்படியாக குறைக்கப்படும். அங்கு பணிபுரியும் டாக்டர்கள், நர்சுகளை வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும். கொரோனா ஒழிக்கப்பட்ட நோய் அல்ல. கட்டுப்படுத்தப்பட்ட நோய் என்றே உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் நாராயண பாபு, ஆஸ்பத்திரி டீன் டாக்டர் தேரணிராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்