மாற்றுத்திறனாளியை அடித்து வீட்டை விட்டு விரட்டிய 3 பேர் கைது..!
நிலக்கோட்டை அருகே கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட மாற்றுத்திறனாளியை அடித்து வீட்டை விட்டு விரட்டி 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே அக்ரகாரபட்டி பகுதியை சேர்ந்தவர் மாற்றுத்திறனாளியான ரமேஷ். இவரின் தந்தை ராமர் கடந்த 2018ம் ஆண்டு இறக்கும் முன்பு ரமேஷின் தாய் மாமனான அழகேசன், அழகேசன் மனைவி அய்யம்மாள் ஆகிய 2 பேர்களிடம் ரூபாய் 5 லட்சம் கொடுத்துள்ளார். இந்த பணத்தை ரமேஷிடம் கொடுத்து விடும்படி அழகேசனிடம் சொன்னதாக கூறப்படுகிறது
இதை தொடர்ந்து ரமேஷ் கடந்த 4 வருடமாக கேட்டு வந்துள்ளார். அழகேசன் இல்ல விழா வைத்து மொய் பணம் பெற்று பணத்தை திரும்ப தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். கடந்த பிப்ரவரி 11ம் தேதி இல்ல விழா வைத்துள்ளார். இதை தொடர்ந்து ரமேஷ் சென்று பணத்தை கேட்டதற்க்கு கோபமாக பேசியதாக தெரிகிறது.
அதன் பின் வீட்டில் இருந்த ரமேசை அழகேசன், அழகேசன் மனைவி அய்யம்மாள், உறவினர் காளியம்மாள் ஆகிய 3 பேர்களும் சென்று உனக்கு எதுக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி அடித்து மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றிவிட்டனர். இனிமேல் வீட்டிற்கு வந்தால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் ரமேஷ் நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் புகார் கொடுத்துள்ளார். விசாரணை நடத்திய போலீசார் அழகேசன், அய்யம்மாள் மற்றும் காளியம்மாள்ஆகிய 3 பேரையும் கைது செய்து அய்யம்மாள், காளியம்மாள் 2 பேர்களையும் நிலக்கோட்டை மகளிர் சிறைச்சாலையிலும், அழகேசன் பழனி சிறைச்சாலையிலும் அடைத்தனர்.