பிரபல நடிகர் மகள்-மருமகள் தலைமுடியை பிடித்து கட்டிப்புரண்டு சண்டை
பழம் பெரும் நடிகரான எஸ்எஸ்ஆரின் மகளும் மருமகளும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
பராசக்தி, பூம்புகார், மனோகரா உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்தவர் லட்சிய நடிகர் எஸ்எஸ்ஆர் எனும் எஸ் எஸ் ராஜேந்திரன். இவரது மூத்த மகள் லட்சுமி, மகன் மருதுபாண்டி ஆகியோர் தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
இந்த வீட்டிற்கு காவலாளியை நியமிப்பது தொடர்பாக மாமியார் லட்சுமிக்கும், அவரது மருமகள் சுஜைனிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த களேபரத்துக்கு இடையே மருமகள் சுஜைனி, தனது மாமியாரின் பேச்சுக்குக் கட்டுப்படாமல் வீட்டிற்கு இளநீர் விற்பவரை புதிய காவலாளியை நியமித்ததாகக் கூறப்படுகின்றது.
இதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றி கைகலப்பான நிலையில், இருவரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி தலைமுடியை பிடித்துக் கொண்டு கட்டிப்புரண்டு சண்டையிட்டதால், அங்கு பரபரப்பு உருவானதாக, சம்பவத்தை பார்த்தவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
லட்சுமியின் ஆவேச தாக்குதலில் காயமடைந்த மருமகள் சுஜைனி , ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குப் பின்னர் வீடு திரும்பியதாகக் கூறப்படுகின்றது. இதற்கிடையே மாமியார் லட்சுமி தன்னைத் தாக்கி விட்டதாக மருமகள் சுஜைனி தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனை தொடர்ந்து மருமகள் தன்னை தாக்கிவிட்டதாக மாமியார் லட்சுமியும் எதிர்புகார் கொடுத்துள்ளதால் இரு புகார்கள் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.