‘பூத் சிலிப்’ இல்லாத வாக்காளர்கள் 12 ஆவணங்களை காட்டி வாக்களிக்க அனுமதி - தேர்தல் ஆணையம் உத்தரவு
தமிழகத்தில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்காளர்கள் ‘பூத் சிலிப்’ இல்லாதவர்கள் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்கள் பயன்படுத்தி வாக்களிக்க மாநில தேர்தல் ஆணையம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தமிழகத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது நகர்ப்புற உள்ளாட்சிகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்டவைகளுக்கான தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த வகையில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகளுக்கு (கடம்பூர் தவிர்த்து) தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலில் வாக்காளர்கள் எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் வாக்களிக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் தமிழகத்தில் ‘பூத் சிலிப்’ வழங்கும் பணியை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. மேலும் வாக்காளர்கள் தங்களது வாக்குச்சாவடி மற்றும் ‘பூத் சிலிப்பை’ ஆன்-லைன் மூலம் பெறவும் ஏற்பாடு செய்துள்ளது.
இந்தநிலையில் வாக்குப்பதிவு நாளான வரும் 19-ந் தேதி 38 மாவட்டங்களில் உள்ள வாக்காளர்கள் மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட ‘பூத் சிலிப்’ அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 12 ஆவணங்களை கொண்டு வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மாநில தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட ‘பூத் சிலிப்’ அல்லது வாக்காளர் அடையாள அட்டை கொண்டு வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிக்கலாம். இந்த 2 ஆவணங்களும் இல்லாதவர்கள், ஆதார் அட்டை, தேசிய ஊரக வேலை பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி/அஞ்சலக கணக்கு புத்தகம், தொழிலாளர் அமைச்சகம் வழங்கிய மருத்துவ காப்பீடு ஸ்மார்ட் அட்டை, ஓட்டுனர் உரிமம், பான் கார்டு, பாஸ்போர்ட், புகைப்படத்துடன் உள்ள ஓய்வூதிய ஆவணம் உள்ளிட்ட 11 ஆவணங்கள் கொண்டும் வாக்களிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.