நர்சரி பள்ளிகள் 16-ந்தேதி முதல் திறப்பு தியேட்டர்களில் 100 சதவீதம் அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு

கொரோனா பரவலின் வேகம் மீண்டும் அதிகரிக்க தொடங்கியதால், தமிழ்நாட்டில் கடந்த மாதம் 7-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் நடைமுறைப்படுத்தப்பட்டது.

Update: 2022-02-12 21:24 GMT
சென்னை,

கொரோனா பரவல் சற்று குறைந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கும், 30-ந்தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கும் ரத்து செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் பள்ளி, கல்லூரிகளும் கடந்த 1-ந்தேதி முதல் திறக்கப்பட்டன.

தற்போது, நடைமுறையில் இருந்து வரும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் வருகிற 15-ந்தேதியுடன் முடிவடைய இருந்த நிலையில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச்செயலகத்தில், கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

கூட்டத்தில், தலைமைச்செயலாளர் இறையன்பு, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சிவ்தாஸ் மீனா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் குமார் ஜயந்த், பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் காகர்லா உஷா, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சிறப்பு பணி அலுவலர் பி.செந்தில்குமார், பொதுத்துறை செயலாளர் ஜகந்நாதன், பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து இயக்குனர் டாக்டர் டி.எஸ்.செல்வவிநாயகம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழ்நாட்டில், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக 22-1-2022 அன்று 30,744 ஆக இருந்த நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11-2-2022 அன்று 3,086 ஆக குறைந்துள்ளது.

நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க போதுமான மருத்துவ கட்டமைப்புகள் தயார் நிலையில் உள்ளன. ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள உள்நோயாளிகளின் எண்ணிக்கை குறைவாக உள்ளதை கருத்தில் கொண்டும், மாநிலத்தின் வேலைவாய்ப்பு, பொருளாதாரம், மாணவ-மாணவிகளின் எதிர்காலம் மற்றும் மக்களின் இயல்பு வாழ்க்கை மீள திரும்புவதற்கு ஏதுவாகவும், தமிழ்நாடு அரசால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளன.

மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் கட்டாயம் முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து மற்றும் 2 தவணை தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், அனைத்து கடைகளின் நுழைவுவாயிலிலும் வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்பநிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்.

கடைகளில் பணிபுரிபவர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் கட்டாயம் முககவசம் அணிவதை சம்பந்தப்பட்ட நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டில் தொடர்ந்து தொற்றுப்பரவலை கட்டுக்குள் வைத்திடவும், குறைத்திடவும், கட்டுப்பாடுகள் மட்டும் 16-2-2022 முதல் 2-3-2022 வரை நடைமுறைப்படுத்தப்படும்.

சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கும் உள்ள தடை தொடரும். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகள் அதிகபட்சம் 200 பேருடன் மட்டும் நடத்த அனுமதிக்கப்படும். இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 100 பேருக்கு மிகாமல் அனுமதிக்கப்படும்.

இந்த கட்டுப்பாடுகள் தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுப்பாடுகள் விலக்கி கொள்ளப்படுகின்றன. நர்சரி பள்ளிகள் (எல்.கே.ஜி., யு.கே.ஜி.) மற்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள் (பிளே ஸ்கூல்) 16-ந்தேதி முதல் திறக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

மேலும் பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்படுகிறது. கொரோனா தொற்றில் இருந்து மக்களை காத்திட அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த செய்திக்குறிப்பில், ‘சமுதாய, கலாசார மற்றும் அரசியல் கூட்டங்கள் போன்ற பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளுக்கு உள்ள தடை தொடரும்’ என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருமண நிகழ்வுகளில் கூடுதலாக 100 பேருக்கும், இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் கூடுதலாக 50 பேருக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த கட்டுப்பாடுகளை தவிர்த்து கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக விதிக்கப்பட்ட ஏனைய கட்டுப்பாடுகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நர்சரி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. பொருட்காட்சிகள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.

இதேபோல், அரசு மற்றும் தனியாரால் நடத்தப்படும் அனைத்து கலை விழாக்களுக்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. உணவகங்கள், விடுதிகள், பேக்கரிகள், தங்கும் விடுதிகள் மற்றும் உறைவிடங்களில் 100 சதவீதம் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படுகிறது.

துணிக்கடைகள் மற்றும் நகைக்கடைகள், கேளிக்கை விடுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், விளையாட்டுகள், உணவகங்கள் ஆகியவற்றிலும், தனியாக உள்ள உடற்பயிற்சி கூடங்கள், யோகா பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றிலும் 100 சதவீத வாடிக்கையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

இதேபோல், அனைத்து தியேட்டர்களிலும் 100 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும், உள் விளையாட்டு அரங்குகள், அனைத்து உள் அரங்குகளில் நடத்தப்படும் கருத்தரங்குகள், இசை, நாடகம் போன்ற நிகழ்ச்சிகள், அழகு நிலையங்கள், சலூன்கள், அனைத்து பொழுதுபோக்கு கேளிக்கை பூங்காக்கள் முழுவதுமாக அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்