இந்தியாவின் ஒற்றுமையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது
புதுச்சேரியில் நடைபெறும் கைவினை, உணவு மற்றும் கலாசாரத்தின் தனித்துவமான சங்கமம் (ஹுனர் ஹாட்) கண்காட்சி இந்தியாவின் ஒற்றுமைைய வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்து உள்ளார்.
புதுச்சேரியில் நடைபெறும் கைவினை, உணவு மற்றும் கலாசாரத்தின் தனித்துவமான சங்கமம் (ஹுனர் ஹாட்) கண்காட்சி இந்தியாவின் ஒற்றுமைைய வளர்ப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது என முதல்-அமைச்சர் ரங்கசாமி தெரிவித்து உள்ளார்.
ஹுனர் ஹாட் தொடக்க விழா
மத்திய சிறுபான்மையின நலத்துறை அமைச்சகம் சார்பில், இந்தியா முழுவதும் கைவினை, உணவு மற்றும் கலாசாரத்தின் தனித்துவமான சங்கமம் (ஹுனர் ஹாட்) நடத்தப்படுகிறது. அதன்படி புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் ஹுனர் ஹாட் தொடக்க விழா நேற்று நடைபெற்றது. விழாவில் மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரி முருகன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தனர்.
விழாவில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன், சாய் சரவணன் குமார், செல்வகணபதி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஜான்குமார், வெங்கடேசன், ராமலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.
சுயசார்பு பாரதம்
விழாவில் மத்திய இணை மந்திரி முருகன் பேசியதாவது:-
36-வது கைவினை, உணவு மற்றும் கலாசார கண்காட்சி தமிழ் மண்ணான புதுச்சேரியில் நடைபெறுவது நமக்கெல்லாம் மிகப்பெரிய கவுரவம். இங்கு ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள கைவினை கலைஞர்களின் தனித்துவம் மிக்க பொருட்களை காட்சிப்படுத்தி உள்ளனர். நமது நாட்டில் உள்ள தலைச்சிறந்த கலைஞர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. தேசம் முழுவதும் இருந்து வருகை புரிந்துள்ள தலைச்சிறந்த கைவினை கலைஞர்களை வரவேற்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சுடுமண் சிற்பம்
முதல்-அமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-
புதுச்சேரி மிகச்சிறிய அழகான, ஆன்மிக மாநிலம். இங்கு இளைஞர் பெருவிழாவையும், கைவினை, உணவு மற்றும் கலாசார கண்காட்சியை நடத்துவதற்கு அனுமதி அளித்த பிரதமர் மோடிக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துகொள்கிறேன். இங்கு காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள கைவினை கலைஞர்களிள் தயாரித்த பொருட்களுக்காக 300 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. கலைஞர்கள் கலைத்திறன் அனைவரையும் வியக்கும் அளவில் இருக்கும். ஆனால் அவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவே இருக்கிறார்கள். கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கவும், அவர்கள் உருவாக்கிய பொருட்களை சந்தைப்படுத்தும் நோக்கிலும் மத்திய அரசு கண்காட்சியை நடத்துகிறது.
புதுவை மாநிலத்தில் திறமை வாய்ந்த கலைஞர்கள் உள்ளனர். கலைஞர்களை ஊக்குவிக்க வேண்டியது அரசின் கடமை. நலிந்த கலைஞர்களுக்கு புதுவை அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. புதுவை மாநில சுடுகளிமண் சிற்பம் உலக அளவில் பிரபலம் அடைந்து வருகிறது. சுடுமண் சிற்ப கலைஞருக்கு மாநில அரசு கலைமாமணி விருதும், மத்திய அரசு பத்ம விருது வழங்கியும் கவுரவித்துள்ளது.
ஒற்றுமை
புதுவை சுற்றுலா மையமாக திகழ்கிறது. இங்கு வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகிறார்கள். அரசுக்கு சுற்றுலா மூலமாக தான் வருவாய் கிடைக்கிறது. இந்த கண்காட்சியின் மூலமாக சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்கும் என நம்புகிறேன். இந்த கண்காட்சி இந்தியாவின் ஒற்றுமையை வளர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. நாட்டின் ஒற்றுமை தான் நமது பலம். அதைத்தான் பிரதமர் மோடியும் வலியுறுத்துகிறார்.
இவ்வாறு அவர் பேசினார்.
கண்காட்சியில் புதுச்சேரி மட்டுமின்றி 30-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து 600-க்கும் மேற்பட்ட கைவினை கலைஞர்கள் தங்களின் பொருட்களை கண்காட்சிக்கு வைத்துள்ளனர். மேலும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பாரம்பரிய உணவுகளும், சர்க்கஸ் மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். இந்த கண்காட்சி வருகிற 22-ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.