வட மாநிலத்தை சேர்ந்த 6 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு
வட மாநிலத்தில் இருந்து திருப்பூர் பனியன் கம்பேனிக்கு வேலைக்கு வந்த 6 குழந்தை தொழிலாளர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
திருச்சி,
திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். ஹவுராவில் இருந்து வந்த ரெயிலில் அவர்கள் சோதனை மேற்கொண்ட போது, சந்தேகப்படும் வகையில் 15 வயதுடைய 2 சிறுவர்கள், 16 வயது சிருவன் ஒருவர் என்று 3 சிறுவர்கள் ஒரு பெட்டியில் உட்கார்ந்து இருந்தனர். இதுபோல் புவனேஷ்வரில் இருந்து திருச்சி வழியாக ராமேசுவரம் சென்ற ரெயிலில் 16 வயதுடைய 3 சிறுவர்கள் இருந்தனர்.
உடனே அவர்கள் 6 பேரையும் பிடித்து விசாரணை செய்த போது, அவர்களில் 5 பேர் ஒரிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும், ஒருவர் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்துக்கு வேலைக்காக ரெயிலில் புறப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 6 பேரையும் காப்பகத்தில் ஒப்படைத்த ரெயில்வே பாதுகாப்பு படையினர், 6 சிறுவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.