அமெரிக்கரை காதலித்து கரம் பிடித்த நாகர்கோவில் பெண் என்ஜினீயர்: தமிழ் முறைப்படி திருமணம்..!
அமெரிக்காவை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயருக்கும், நாகர்கோவில் பெண் என்ஜினீயருக்கும் சென்னையில் தமிழ் முறைப்படி நேற்று திருமணம் நடைபெற்றது.
சென்னை,
சென்னை மாதவரம் பகுதியில் வசிக்கும் நாகர்கோவில் சாமிதோப்பை பூர்விகமாக கொண்ட ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரனின் மகள் அகிலா (வயது 28). பெண் என்ஜினீயரான இவரும், அமெரிக்காவின் வெர்ஜினியா மாகாணம் மிச்சிகன் பகுதியை சேர்ந்த சாப்ட்வேர் என்ஜினீயர் பீட்டர் லாக்கர் (30) என்பவரும் காதலித்து கரம் பிடித்துள்ளனர்.
இவர்கள் திருமணம் சென்னை தியாகராயர்நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்றது. அமெரிக்க மாப்பிள்ளை பீட்டர் லாக்கர் தமிழரின் பாரம்பரிய உடையான பட்டு வேஷ்டி-சட்டை அணிந்திருந்தார். அவரது தாயார் லிசா லாக்கர், சகோதரர் ஜேக் லாக்கர், அவரது மனைவி மேகன் ஆகியோரும் நமது பாரம்பரிய உடை அணிந்திருந்தனர்.
அய்யா வழி முறையில் ‘மவுளி கல்யாண மணமாலை வாழ்த்தலக்கோ...’ என்ற பாடல் இசைக்க, மணமகன் பீட்டர் லாக்கர் மணப்பெண் அகிலா கழுத்தில் தாலி கட்டினார். பின்னர் தமிழ் முறைப்படி சடங்குகள், சம்பிராதயங்கள் நடைபெற்றன.