உள்ளாட்சியிலும் நல்லாட்சிதர தி.மு.க. கூட்டணிக்கு வாக்களியுங்கள் - விருதுநகரில் கனிமொழி எம்.பி. பிரசாரம்
உள்ளாட்சியிலும் நல்லாட்சி தருவதற்கும், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துவதற்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என கனிமொழி எம்.பி. பேசினார்.
விருதுநகர்,
விருதுநகரில் தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி நேற்று பல்வேறு பகுதிகளில் திறந்த வேனில் சென்று தீவிர பிரசாரம் மேற்கொண்டார். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் எம்.எல்.ஏ., விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஸ்ரீராஜா சொக்கர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். பிரசாரத்தில் கனிமொழி எம்.பி. பேசியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வெற்றி பெறச் செய்ததன் மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி தந்து கொண்டிருக்கிறார். மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறார்.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது. அரசு டவுன் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் என்று உறுதி அளித்தார். முதல்-அமைச்சராக பொறுப்பு ஏற்றதும் பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம் திட்டத்தை அனுமதித்து கையெழுத்திட்டார்.
மேலும் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் அதிக இட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், அரசு வேலைவாய்ப்பில் 40 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார். அதனையும் நிறைவேற்றி தந்துள்ளார். மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறியபடி அதனை நிறைவேற்றினார்.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.1000 வழங்கப்பட்டது. அதனை ரூ. 5 ஆயிரமாக உயர்த்தி தரவேண்டும் என்று அப்போது தி.மு.க. கோரியது. ஆனால், மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கொரோனா நிவாரண நிதியாக ரூ.4 ஆயிரம் வழங்கப்பட்டது.
தடுப்பூசி முகாம்கள் நடத்தி மக்கள் தடுப்பூசி போட முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுத்தார். படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்காக. தமிழகத்தில் ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடி தொழில் முதலீடுகளை கொண்டு வந்துள்ளார். அதன்மூலம் அடுத்த சில ஆண்டுகளில் தொழிற்சாலைகள் தொடங்கப்படும்.
நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தை நிறுத்திவிட்டு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி 2-வதாக மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளார். ஆனால் இக்கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஆதரவு அளித்த நிலையில் 4 பேர் மட்டும் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள்.
அவர்களுக்கு தமிழக ஏழை-எளிய மாணவர்களை பற்றி அக்கறை இல்லை. நீட் தேர்வை ரத்து செய்ய முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்பது உறுதி.
கர்நாடக மாநிலம் தகவல் தொழில்நுட்பத்துறையில் தமிழகத்துடன் போட்டி போடக்கூடிய மாநிலமாகும். அந்த மாநிலம் அமைதியாகவே இருந்தது. ஆனால் தற்போது அங்கு இஸ்லாமிய மாணவிகள் பர்தா போடக்கூடாது என்ற பிரச்சினையினால் வன்முறை வெடித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சியில் முதியவர்களுக்கும் பெண்களுக்கும் மாணவ-மாணவிகளுக்கும் யாருக்கும் பாதுகாப்பில்லை. தேசியக் கொடி கம்பத்தில் காவிக்கொடி ஏற்றுகிறார்கள்.
இந்த மாவட்டத்தில் ஒரு அமைச்சர் இருந்தார். அவர் அ.தி.மு.க.வில் இருந்தாரா, பா.ஜ.க.வில் இருந்தாரா என்பது தெரியவில்லை. இந்தநிலையில் பல பேரிடம் வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து அவர் காணாமல் போய்விட்டார். தற்போது போலீசார் அவரை தேடி கண்டுபிடித்து கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ள நிலையிலும் அவரை காணவில்லை.
அவர் தன்னை யாராவது காப்பாற்றுவார் என்று நினைத்தார். ஆனால் அவர் நம்பிய பா.ஜ.க.வும் அவரை காப்பாற்றவில்லை.
விருதுநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண ரூ.440 கோடியில் கூடுதலாக தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும். இதேபோன்று கடந்த 25 ஆண்டுகளாக பழுதாகி உளள ஆனைகுட்டம் அணை ஷட்டர்கள் பழுது பார்க்கப்படும் அல்லது புதிதாக அமைக்கப்படும். விருதுநகர் புதிய பஸ் நிலையத்தை செயல்படுத்தி நெடுந்தூர பஸ்களை அங்கு நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும். வியாபாரிகளுக்கு சரக்கு வாகனங்கள் நிறுத்த இடம் ஒதுக்கீடு செய்யப்படும்.
எனவே தி.மு.க. வேட்பாளர்களுக்கு ஆதரவு தாருங்கள். அவர்கள்தான் உங்களுக்கும் அரசுக்கும் இடையில் பாலமாக இருப்பார்கள். உங்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாக அரசுக்கு தெரிவித்து தீர்வுகாண்பார்கள். எனவே உள்ளாட்சியிலும் நல்லாட்சி தர தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்யுங்கள். முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கரத்தை வலுப்படுத்துங்கள்.
இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.