இந்தியா மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? ஐகோர்ட்டு சரமாரி கேள்வி
நாட்டில் சிலர் ‘ஹிஜாப்’புக்காகவும், சிலர் வேட்டிக்காகவும் போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது என்றும், இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்றும், சென்னை ஐகோர்ட்டு சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது
சென்னை,
திருச்சி, ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில், ‘‘1947-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ்நாடு ஆலய பிரவேச சட்டத்தில், இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை.
கடந்த 1970-ம் ஆண்டு இந்துக்கள் அல்லாதோர் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கும் வகையில் கொண்டுவரப்பட்ட சட்டத்தை ஐகோர்ட்டு 1972-ம் ஆண்டு ரத்து செய்தது. அதன்பின்னரும், பிற மதத்தைச் சேர்ந்தவர்களும், வெளிநாட்டவர்களும் கோவிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றனர்.
எனவே, இந்துக்கள் அல்லாதோர் கோவில்களுக்குள் நுழைய அனுமதியில்லை என்று பெரிய அளவில் விளம்பர பலகைகளை கோவில் நுழைவுவாயில்களில் வைக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் ரங்கராஜன் நரசிம்மன், "கோவிலுக்கு வருபவர்கள் மரபுபடி வேட்டி, சேலை, தாவணி போன்ற உடை அணிந்து வரவேண்டும். தஞ்சை பிரகதீஸ்வரர், மதுரை மீனாட்சியம்மன் கோவில்களில் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்கள் லுங்கி, டவுசர் அணிந்து வருகிறார்கள். வெளிநாட்டவர்களும் வருகிறார்கள். இவையெல்லாம் ஆகம விதிகளுக்கு எதிரானவை" என்று வாதிட்டார்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், ‘சுசீந்திரம் போன்ற கோவில்களில் ஆடை கட்டுப்பாடுகள் அமலில் உள்ளன. அங்கு ஆண்கள் மேலாடை அணிய தடை விதிக்கப்படுகிறது. இந்து கோவில்களுக்குள் வெளிநாட்டவர், பிற மதத்தினர் அனுமதிக்கப்பட்டாலும், கோவில் கொடிமரத்தை தாண்டி அவர்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. கோவிலுக்குள் செல்லும்போது ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று ஐகோர்ட்டு தனி நீதிபதி ஏற்கனவே பிறப்பித்த உத்தரவை, இரு நீதிபதிகள் கொண்ட டிவிஷன் பெஞ்ச் ரத்து செய்துள்ளது. இதுபோல ஆடை கட்டுப்பாடுகளை விதிக்க ஐகோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர். பல கோவில்களில் பிற மதத்தினருக்கு அனுமதி இல்லை என்கின்ற விளம்பரப்பலகை வைக்கப்பட்டுள்ளன’ என்று கூறினார்.
இதையடுத்து நீதிபதிகள், ‘சுசீந்திரம் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் உரிய நடைமுறைகளும் மரபுகளும் பின்பற்றப்படுகிறது. நாட்டில் சிலர் ‘ஹிஜாப்’புக்காக போராடுவதும், சிலர் கோவில்களில் வேட்டி கட்ட வேண்டும் என போராடுவதும் அதிர்ச்சி அளிக்கிறது.
இந்தியா ஒரு மதசார்பற்ற நாடா அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என்று கேட்க தோன்றுகிறது. நாடு முக்கியமா அல்லது மதம் முக்கியமா?" என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் நீதிபதிகள், ‘‘அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான மரபு பின்பற்றப்படுகிறதா? ஆகம சாஸ்திரத்தில் குறிப்பிட்ட உடை அணிந்துதான் கோவிலுக்குள் செல்ல வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதா?, அப்படி ஒரு மரபு உள்ளதா? அந்த மரபு எந்த கோவிலில் உள்ளது? வேட்டி அணிந்துதான் ஆண்கள் கோவிலுக்கு வர வேண்டும் என்று ஆகம சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளதாக ஏதேனும் ஆதாரம் உள்ளதா? என்று மனுதாரரை நோக்கி சரமாரியாக நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த ரங்கராஜன் நரசிம்மன், ஆகம சாஸ்திர ஆதாரங்கள் தற்போது என்னிடம் இல்லை. அதை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற மக்களிடையே பிளவை உருவாக்கக்கூடிய பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடாது. இது மத ரீதியாக நாட்டை பிளவுபடுத்துவது போன்றதாகும் என்று கூறினர். பின்னர், மனுவுக்கு இரு வாரங்களில் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும், ஆடைக்கட்டுப்பாடு விதிகள் குறித்த ஆகம சாஸ்திர ஆதாரங்களை தாக்கல் செய்ய மனுதாரருக்கும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.