கல்வி கட்டண விவகாரம் அரசு சமுதாய கல்லூரி மாணவர்கள் தர்ணா
கல்வி கட்டண விவகாரம் தொடர்பாக லாஸ்பேட்டை அரசு சமுதாய கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி
கல்வி கட்டண விவகாரம் தொடர்பாக லாஸ்பேட்டை அரசு சமுதாய கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்ணா போராட்டம்
லாஸ்பேட்டையில் பல் கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் அரசு சமுதாய கல்லூரி உள்ளது. இங்கு 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களில் பலர் 2019-2020-ம் ஆண்டுக்கான கல்வி கட்டணம், தேர்வுக் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து 2022-ம் ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வு வருகிற 25-ந் தேதி முதல் நடக்கிறது. எனவே மாணவர்கள் நிலுவை தொகையை உடனடியாக செலுத்துமாறு கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள், குறுகிய காலத்திற்குள் தங்களால் கட்டணத்தை முழுமையாக செலுத்த முடியாது என்று கூறி நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்துக்கு அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் தலைவர் கோகுல், செயலாளர் தரணி தரண் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பேச்சுவார்த்தை
இதுபற்றி தகவல் அறிந்தவுடன் லாஸ்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் மாணவர்கள் போராட்டத்தை கைவிடவில்லை.
பின்னர் கல்லூரி முதல்வர் லலிதா ராமகிருஷ்ணன் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். அப்போது 19-ந்தேதி வரை கல்வி கட்டணம் செலுத்த கால அவகாசம் கொடுப்பதாகவும் அதற்குள் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இதை ஏற்று மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
===