அணுக்கழிவு மையம் அமைப்பதை தடுக்க தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தல்

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைப்பதை தமிழக அரசு தடுக்க வேண்டும் என பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

Update: 2022-02-10 12:03 GMT
சென்னை,

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்கும் பணியை தேசிய அணுமின் கழகம் தொடங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் 2013 ஆம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் கூறியபடி 5 ஆண்டுகளுக்குள் அணுக்கழிவு மையம் அமைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளனர். 

முதல் இரண்டு உலைகளில் வெளியாகும் அணுக்கழிவுகளை உலைக்கு கீழே சேமிக்க திட்டமிட்ட நிலையில், 'Away from reactor' வசதியை 3 மற்றும் 4-வது உலைகளின் கீழ் சேர்த்து கட்டுமானம் கட்டுவதாக அந்த அமைப்பு கூறியுள்ளது. 

அணுக்கழிவு மையத்தை அமைக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்தாத நிலையில், அணுக்கழிவு மையத்தை அமைக்கும் அணுமின் நிலையம் சில ஆண்டுகள் கழித்து கழிவுகளை எங்கு கொண்டு செல்லும்? என்ற கேள்வி எழுந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இதனிடையே நாடாளுமன்றத்தில் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய மந்திரி ஜிதேந்திர சிங் அளித்த பதிலின் மூலம், அணுக்கழிவுகளை கையாளும் தொழில்நுட்பம் இந்தியாவில் இல்லை என்பது உறுதியாகி உள்ளதாகவும், அணுக்கழிவுகளை சேமித்து வைக்க உலக நாடுகளே திணறும் நிலையில் ஆழ்நில கருவூலம் அமைக்கும் இடம் கூட தேர்வு செய்யாமல் கூடங்குளத்தில் அணுக்கழிவுகளை சேமித்து வைக்க முயல்வது நியாயமா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் மின் உற்பத்திக்கான அணு உலை கட்டுமானமும், கதிர்வீச்சை வெளியேற்றும் அணுக்கழிவு மைய கட்டுமானமும் ஒரே செயல்பாடாக கருதமுடியாது எனவும், தமிழக மக்களை சோதனை எலிகளாக கருதி அணுக்கழிவு மையம் அமைப்பதை மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து தமிழக அரசு தடுக்க வேண்டும் எனவும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. 

மேலும் செய்திகள்