நாட்டில் பர்தா, கோவில்களில் வேட்டி அணிவது தொடர்பாக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது - சென்னை ஐகோர்ட்டு..!!
இந்தியா மதச்சார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? என ஐகோர்ட் நீதிபதி கேள்வி எழுப்பினார்.
சென்னை,
இந்து மத கோயில்களில் நுழைபவர்கள் ஆடை கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்டிருந்தது.
மேலும், மனுதாரர் தான் தொடர்ந்த அந்த வழக்கில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘இந்துக்கள் அல்லாதோர், வெளிநாட்டவருக்கு கோவில்களில் அனுமதி இல்லை என்றும் கோயில்களில் லுங்கி, டிரவுசர் போன்ற ஆடைகளை அணிந்து வரக் கூடாது. இது தொடர்பாக விளம்பரப் பலகையில் வைக்க வேண்டும். அந்த சட்டத்தை அமல்படுத்தவும் வேண்டும்’ என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வுக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மூனீஷ்வர் நாத் பண்டாரி, “ஆகம விதிகளில் வேட்டி தான் அணிய வேண்டும் என இருப்பதாக ஆதாரங்கள் உள்ளதா?” என்பன போன்ற கேள்விகளுக்கு தமிழக அரசு 2 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு விசாரணையை 2 வரங்களுக்கு ஒத்தி வைத்தார்.
இதனை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பாக கருத்து தெரிவித்த நீதிபதி கூறுகையில், “இந்தியா மதச்சார்பற்ற நாடா? அல்லது மத ரீதியாக பிளவுபட்ட நாடா? நாட்டில் ஹிஜாப், கோவில்களில் வேட்டி அணிவது ஆகியவற்றுக்காக போராடுவது அதிர்ச்சி அளிக்கிறது. மதச்சார்பற்ற நாட்டில் இதுபோன்ற பிரச்சினைகள் மத ரீதியாக நாட்டில் பிளவை ஏற்படுத்தும்” என்று வேதனை தெரிவித்தார்.