பாஜக அலுவலகத்தில் குண்டு வீசியது ஏன்? - கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை கண்டிக்கவே பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்தாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை,
சென்னையில் தி.நகர் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் திடீரென மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றம் ஏற்படுத்தியது. இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். முன்னதாக அலுவலகத்தின் கதவு சாத்தப்பட்டு இருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. 3 மது பாட்டில்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு உள்ளது என முதற்கட்ட தகவல் தெரிவிக்கின்றது. சம்பவ இடத்தில் துணை ஆணையர் தலைமையில் போலீசார் சென்று விசாரணை நடத்தி வந்த நிலையில்,
பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக சென்னையைச் சேர்ந்த வினோத் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
நீட் தேர்வு விவகாரத்தில் பாஜகவின் நிலைப்பாட்டை கண்டிக்கவே பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. சென்னை கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக கைதான கருக்கா வினோத் வாக்குமூலம் அளித்துள்ளார்.
"மதரீதியாகவோ, அரசியல் சம்பந்தமாகவோ, பெட்ரோல் குண்டு வீசவில்லை".கருக்கா வினோத்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீசார் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது பிரச்சினையில் தானாகவே தலையிட்டு குடிபோதையில் குற்ற சம்பவங்களில் ஈடுபடும் மனநிலை கொண்டவர் கருக்கா வினோத் உள்ளார் என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து இவர் இப்படி செய்ததாக தகவல்கள் வந்தாலும் அது உறுதிப்படுத்தப்படவில்லை. இதற்கு முன்பே இவர் பல முறை இப்படி பெட்ரோல் குண்டு தாக்குதல்களை நடத்தி இருக்கிறார்.
இவர், 2017ஆம் ஆண்டு டாஸ்மாக் கடையிலும் ,தேனாம்பேட்டை காவல் நிலையத்திலும் இதேபோன்று பெட்ரோல் குண்டு வீசி குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கிறார்.
கருக்கா வினோத் என்ற பெயரில் இவர் அழைக்கப்பட்டு வருகிறார். காசுக்காக பெட்ரோல் குண்டு வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி இருக்கும் போது இவர் எப்படி நீட் தேர்விற்கு எதிர்ப்பு தெரிவித்து பெட்ரோல் குண்டு வீசுவார் என்று கேள்வி எழுந்துள்ளது.
2015 ம் ஆண்டு டாஸ்மாக் கடையிலும், 2017 ம் ஆண்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைதானார்.
பணம் கொடுத்து யாரேனும் குண்டு வீசச் சொல்லியுள்ளனரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.