‘நீட்’ தேர்வு ரத்து செய்யும் வரை ஓயமாட்டோம்-உதயநிதி ஸ்டாலின் உறுதி

‘நீட்’ தேர்வு ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம் என கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கூறினார்.

Update: 2022-02-09 19:45 GMT
கரூர், 
உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி கரூர் மாநகராட்சியில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தி.மு.க. இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி எம்.எல்.ஏ.வுமான உதயநிதி ஸ்டாலின் கரூர் பஸ் நிலையம் அருகே திறந்த வேனில் நின்றபடி வாக்கு சேகரித்து பேசினார். பின்னர் புகழூர், பள்ளப்பட்டி நகராட்சிகள், புஞ்சை தோட்டக்குறிச்சி, அரவக்குறிச்சி பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து வேலாயுதம்பாளையம் ரவுண்டானாவிலும், கிருஷ்ணராயபுரம், புலியூர், உப்பிடமங்கலம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் ஆகிய பேரூராட்சிகளின் வேட்பாளர்களை ஆதரித்து கிருஷ்ணராயபுரத்திலும், குளித்தலை நகராட்சி, மருதூர், நங்கவரம் பேரூராட்சி வேட்பாளர்களை ஆதரித்து குளித்தலை பஸ் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கொரோனா அலை
கரூர் மாவட்டத்திற்கும் தி.மு.க.வுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. கடந்த 1957-ம் ஆண்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியை குளித்தலை தொகுதியில் வெற்றி பெற செய்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். அதுபோல் தற்போது நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.
கொரோனா 2-வது அலையின்போது தி.மு.க. ஆட்சி அமைந்தது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கைகள் தட்டுப்பாடு நிலவியது. இதையடுத்து, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனைத்து அமைச்சர்களையும் களத்தில் இறக்கி தீவிர பணியாற்றியதோடு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா 3-வது அலையை நாம் எளிதாக கடக்க முடிந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் 1 கோடி தடுப்பூசி போட்ட நிலையில் தி.மு.க. ஆட்சி அமைந்த 8 மாதங்களில் 9 கோடி தடுப்பூசிகளை போட்டுள்ளோம்.
பெட்ரோல், பால் விலை குறைப்பு
தமிழகத்தில் தி.மு.க. அரசு அமைந்தவுடன் தேர்தல் வாக்குறுதியான கொரோனா நிவாரண தொகையாக ரூ.4 ஆயிரம் கொடுத்தோம். பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளோம். ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைத்துள்ளோம். பெண்களுக்கு இலவச பஸ் வசதியையும் நிறைவேற்றி உள்ளோம். 
தி.மு.க.வுக்கு வாக்களிக்காதவர்களுக்கும் சேர்ந்து நல்ல ஆட்சி அமைப்போம் என்று சொன்னதை செய்து காட்டியவர் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
‘நீட்’ தேர்வு ரத்து
‘நீட்’ தேர்வு ரத்துக்கு ரகசியம் உள்ளதாக உதயநிதி சொன்னார் என எதிர்க்கட்சி தலைவர் கூறி வருகிறார். ஜெயலலிதா இருந்தவரை தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு நடைபெறவில்லை. அவர் இறப்புக்கு பின் நடந்த ‘நீட்’ தேர்வின் காரணமாக இதுவரை 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். எனவே எங்கள் மாணவர்களுக்கான கல்வி உரிமையை நிச்சயம் பெற்றுத்தருவோம். ‘நீட்’ தேர்வு ரத்து செய்யும் வரை நாங்கள் ஓயமாட்டோம்.  அதேபோல் ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்படுவதுடன், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு வேலை வழங்கப்படும். 
தடுப்பணை அமைக்க நிதி
குளித்தலை அருகே உள்ள மருதூர் காவிரி ஆற்றுப் பகுதியில் தடுப்பணை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தில் கரூர் மாவட்டத்தில் மட்டும் 51,531 மனுக்கள் பெறப்பட்டதில் 50,722 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் தி.மு.க. மாவட்ட பொறுப்பாளரும், மின்சாரம், மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி, கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ. சிவகாமசுந்தரி, கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ரவிராஜா, பழைய ஜெயங்கொண்ட சோழபுரம் நகர செயலாளர் மோகன்ராஜ், பேரூராட்சி வார்டு வேட்பாளர் சௌந்தரப்பிரியா, கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி வார்டு வேட்பாளர்கள் சசிகுமார், சேதுமணி, கரூர் மேற்கு ஒன்றிய கழக பொறுப்பாளர் சேகர் என்கிற குணசேகரன் மற்றும் தி.மு.க. வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் உடனிருந்தனர்.
பேக்கரியில் டீ குடித்த உதயநிதி ஸ்டாலின்
 உதயநிதி ஸ்டாலின் கரூரில் இருந்து வேலாயுதம்பாளையம் பிரசாரத்திற்கு வந்தபோது கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பாலத்துறை பிரிவு ரோட்டில் இருந்த ஒரு பேக்கரிக்கு சென்று அங்கு டீ குடித்தார். பின்னர் கடையில் இருந்தவர்களிடம் உதயநிதி ஸ்டாலின் சிறிது நேரம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

மேலும் செய்திகள்