புதுக்கோட்டையில் பரபரப்பு: பள்ளி மாணவன் உடலை வாங்க மறுத்து 5 மணி நேரம் சாலை மறியல்
புதுக்கோட்டையில் பள்ளி மாணவன் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 5 மணி நேரம் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அமைச்சர் மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு பின் சமரசமடைந்தனர். தலைமை ஆசிரியை உள்பட 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை:
4-ம் வகுப்பு மாணவன்
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்தவர் நாடிமுத்து. இவரது மனைவி போதினி. இந்த தம்பதியினரின் மகன் நிதிஷ்குமார் (வயது 9). இவன் அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான். இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவன் நிதிஷ்குமாருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பள்ளியிலிருந்து ஆசிரியர்கள் மாணவனின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்து கூறியுள்ளனர்.
மேலும் மாணவனை நேரடியாக வீட்டில் கொண்டு ஆசிரியர் ஒருவர் விட்டு உள்ளார். வீட்டிலிருந்தவர்கள் நிதிஷ்குமாரை உடனடியாக சிகிச்சைக்காக அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த டாக்டர்கள் மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்படி அறிவுறுத்தினர்.
சாலை மறியல்
இதைத்தொடர்ந்து நிதிஷ் குமாரை புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர். ஆனால் வருகிற வழியிலேயே அவன் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆலங்குடி போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று காலை மாணவன் நிதிஷ்குமாரின் உடல் பிரேத பரிசோதனை நடைபெற்றது.
பிரேத பரிசோதனை முடிந்த பின்பு மாணவன் உடலை குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர். அவனது பெற்றோர், குடும்பத்தினர், உறவினர்கள், அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள முள்ளூர் விளக்கு பகுதியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
புகார்
இந்த போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு லில்லி கிரேஸ், இன்ஸ்பெக்டர் குருநாதன் (டவுன்), முகமது ஜாபர் (கணேஷ் நகர்) மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாணவன் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், பள்ளி ஆசிரியர், தலைமை ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்க கோரியும், மாணவனின் சாவுக்கு ரூ.1 கோடி இழப்பு வழங்க வேண்டும் எனவும், அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க கோரியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வருவாய் கோட்டாட்சியர் அபிநயா மற்றும் போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர்கள் போராட்டத்தை கைவிட மறுத்தனர். இதனால் மாலை 4 மணிக்கு மேல் தொடங்கிய போராட்டம் இரவு 8 மணிக்கு மேலும் நீடித்தது. போலீசார் மேலும் குவிக்கப்பட்டனர்.
பேச்சுவார்த்தை
சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இரவு 7.30 மணி அளவில் சாலையில் இருபுறமும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், சாலையில் ஒரு பகுதி மட்டும் போக்குவரத்து திறந்து விடப்பட்டன. இதற்கிடையில் தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பகுதியில் போக்குவரத்து வாகனங்கள் சென்றதால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆத்திரமடைந்தனர். வாகனங்களை மறித்து ஆவேசமாக போராட்டம் நடத்தினர். கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் நேரில் வர வேண்டும் என கோரினர். இதற்கிடையில் மயிலாடுதுறையில் இருந்து அமைச்சர் மெய்யநாதன் காரில் புதுக்கோட்டைக்கு வந்தார். அவர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கந்தர்வகோட்டை தொகுதி சின்னதுரை எம்.எல்.ஏ.வும் உடன் இருந்தார். மேலும் கலெக்டர் கவிதாராமு, போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் ஆகியோரையும் வருமாறு அமைச்சர் அறிவுறுத்தினார். இதையடுத்து அவர்களும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமிநாதனும் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
2 பேர் பணியிடை நீக்கம்
மாணவன் நிதிஷ்குமாரின் சாவு தொடர்பாக விசாரணை நடத்தப்படும், மாணவனை நேரடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாதது ஆசிரியர்களின் தவறு தான். மாணவன் சாவுக்கு அரசு தரப்பில் இருந்து நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் கவிதாராமு உறுதியளித்தார். மேலும் பள்ளி ஆசிரியர் மீது கொடுக்கப்பட்ட புகாரில் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் கூறினார். மேலும் மாணவன் சாவில் பள்ளியில் கவனக்குறைவாக பணியாற்றிய தலைமை ஆசிரியை மகேஸ்வரி, வகுப்பு ஆசிரியர் ஆரோக்கிய அமல்ராஜ் ஆகிய 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்தார். மேலும் அதற்கான நடவடிக்கை உடனடியாக நேற்று இரவு எடுக்கப்பட்டது.
5 மணி நேரம் போராட்டம்
இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சமாதானமடைந்தனர். நேற்று இரவு 9 மணி அளவில் சாலை மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். மேலும் மாணவனின் உடலை பெற்று செல்ல தயராகினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 5 மணி நேரம் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்படைந்தது.
அமைச்சர் மெய்யநாதனின் செல்போன் மாயம்
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று மயிலாடுதுறையில் தேர்தல் பிரசாரத்தில் இருந்துள்ளார். மாணவன் சாவு தொடர்பான போராட்டம் குறித்து தகவல் அறிந்ததும் அவர் விரைந்து வந்தார். அப்போது அவர் கூறுகையில், ‘‘எனது செல்போன் மாயமாகிவிட்டது. அதனால் எனது செல்போன் எண்ணுக்கு நீங்கள் பலரும் தொடர்பு கொண்டு, அழைப்பு கிடைக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் மாணவன் சாவு தொடர்பான தகவல் கிடைத்ததும் நான் வந்துவிட்டேன்'' என்றார். அமைச்சர் பயன்படுத்தி வந்த செல்போன் மயிலாடுதுறையில் கூட்டத்தில் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அங்கு தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லையாம். இதனால் வேறு செல்போன் அவருக்கு உடனடியாக நிர்வாகிகள் ஏற்பாடு செய்துள்ளனர்.
மாணவனின் தாய் மயக்கம்
போராட்டத்தில் மாணவன் நிதிஷ்குமாரின் தாய் போதினி மிகவும் சோகத்துடன் அமர்ந்திருந்தார். அவர் தனது மகனை நினைத்து கதறி அழுதபடியே இருந்தார். இந்த நிலையில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருந்த போது அவர் திடீரென மயக்கமடைந்தார். அவரை உடனடியாக சின்னதுரை எம்.எல்.ஏ.வின் காரில் தூக்கி வைத்து அருகில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
மாணவன் சாவுக்கு காரணம் என்ன?
மாணவன் நிதிஷ்குமாரை விஷ ஜந்துக்கள் எதுவும் கடித்ததில் அவன் இறந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது. ஆனால் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடயவியல் அறிக்கை வந்த பின்னர் தான் மாணவனின் சாவுக்கு காரணம் என்ன? என்பது தெரியவரும். பொதுமக்கள் கூறும் குற்றச்சாட்டு என்னவென்றால், ‘‘பள்ளியில் பாம்பு கடித்ததில் சிறுவன் இறந்திருக்கலாம். ஆனால் ஆசிரியர்கள் அவனை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் நேரடியாக வீட்டில் கொண்டு விட்டதால் பரிதாபமாக இறந்து போனான். இது போல வேறு எந்த மாணவனுக்கும் நிகழக்கூடாது. அரசு பள்ளியில் மாணவர்களின் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்றனர்.
சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே பாப்பான்விடுதியை சேர்ந்த நாடிமுத்து, போதினி தம்பதியினரின் மகன் நிதிஷ்குமார் எதிர்பாராத வகையில் உயிர் இழந்த செய்தியை கேட்டு மிகுந்த துயரமும், வேதனையும் அடைந்தேன். மகனை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்களை தெரிவித்து கொள்கிறேன் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் உயிர் இழந்த சிறுவன் நிதிஷ்குமாரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் உடனடியாக முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து நிதி உதவி வழங்கிட முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.