காணாமல் போன குழந்தை ”லாக்டவுன்” 3 நாட்களுக்கு பிறகு மீட்பு
அம்பத்தூரில் மாயமான குழந்தை லாக்டவுன் 3 நாட்களுக்கு பிறகு கோயம்பேடு பஸ் நிலையத்தில் போலீசார் மீட்டு அவரின் பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
சென்னை,
ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் கிஷோர் இவரது மனைவி புத்தினி இவர்களுக்கு ஆகாஷ்(8) பிரகாஷ்(6) துர்கி(5) மற்றும் லாக்டவுன் என்கிற 1 1/2 வயது குழந்தைகள் உள்ளனர். இவர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சென்னை அம்பத்தூர் பகுதியில் கட்டுமான பணியில் வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த 6-ம் தேதி கணவன் மனைவி இருவரும் பணியில் ஈடுபட்டிருந்த போது அவர்கள் தங்கியிருந்த "ஷெட்டுக்குள்" கட்டிலில் படுத்துக் கிடந்த குழந்தை "லாக்டவுன்" மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் அம்பத்தூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து மர்ம நபர்கள் குழந்தையை கடத்தி சென்று இருக்கலாம் என்கிற கோணத்தில் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்
இந்த நிலையில் நேற்று இரவு 11மணி அளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் சேலத்திற்கு புறப்பட தயாராக இருந்த பஸ்சில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது இது பற்றி அங்கிருந்த பயணிகள் சிலர் பஸ் நிலைய போலீசுக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து போலீசார் விரைந்து வந்து குழந்தையை மீட்டனர்.
விசாரணையில் அம்பத்தூரில் மாயமான வடமாநில தொழிலாளி கிஷோரின் குழந்தையான "லாக்டவுன்" என்பது தெரியவந்தது. பின்னர் கோயம்பேடு பேருந்து நிலைய போலீசார் அம்பத்தூர் போலீஸ் மூலம் குழந்தை "லாக்டவுன்" ஐ அவரின் பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.
குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர்கள் கடந்த 3 நாட்களுக்கு பிறகு போலீசில் சிக்கி விடுவோம் என்று பயந்து பஸ்ஸில் வைத்துவிட்டு தப்பி சென்று இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கோயம்பேடு பஸ் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் பல இடங்களில் பழுதடைந்துள்ளதால் குற்றவாளிகளை கண்டறிவதில் போலீசாருக்கு நெருக்கடி ஏற்ப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்லும் ஆசியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையத்தில் அனைத்து கேமராக்களையும் சி.எம்.டி.ஏ நிர்வாகம் முறையாக பராமரித்து சரி செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.