கிராம பகுதியில் உலாவும் புலி - யாரும் தனியாக செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கை...!

ஊட்டி அருகே புலி நடமாட்டத்தால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

Update: 2022-02-08 14:52 GMT
ஊட்டி,

நீலகிரி வனக்கோட்டம் ஊட்டி வடக்கு வனச்சரகத்துக்கு உட்பட்ட கடநாடு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக புலி உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளது. இங்குள்ள கிராம மக்கள் பெரும்பாலும் விவசாயம் செய்து வருகின்றனர். 

அந்த கிராமங்களை ஒட்டி உள்ள இடங்களில் புலி நடமாடுவதோடு கடமான், காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகளை வேட்டையாடி இழுத்து செல்கிறது. இதனால் கிராம மக்கள் பீதி அடைந்து உள்ளனர். மேலும் அவர்கள் தோட்டங்களுக்கு சென்று வர முடியாத நிலை உள்ளது.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு வந்து நேரில் பார்வையிட்டனர். மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க கேமராக்கள் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதுதவிர இரவு நேரங்களில் குடியிருப்புகளை விட்டு தோட்டங்களுக்கு மக்கள் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. மேலும் புலி நடமாட்டத்தை கண்காணிக்க 10 கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகள்