செங்கல்பட்டு அருகே கடும் போக்குவரத்து நெரிசல்: 10 கி.மீ தொலைவுக்கு அணிவகுத்து நின்ற வாகனங்கள்..!
பாலாற்றின் குறுக்கே பாலம் பராமரிப்பு பணி தொடங்கியதால் செங்கல்பட்டு அருகே சுமார் 10 கி.மீ தூரம் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
செங்கல்பட்டு,
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு அருகே உள்ள பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலம் பழுதடைந்ததால் பராமரிப்பு பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் அருகே உள்ள புதிய பாலத்தில் மட்டுமே வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டது.
இதன் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு, புக்கத்துறை கூட்டு சாலையிலிருந்து பழையசீவரம் வழியாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் திருப்பிவிடப்பட்டன. மேலும் கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மெய்யூர், பிலாப்பூர் வழியாக சென்னைக்கு திருப்பிவிடப்பட்டன.
சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் மட்டுமே புதிய பாலத்தில் செல்ல அனுமதிக்கப்படுகின்றன.