செல்போன் பறித்த வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை

தூத்துக்குடியில் செல்போன் பறித்த வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார்.

Update: 2022-02-07 19:38 GMT
தூத்துக்குடி,

தூத்துக்குடி கிருஷ்ணராஜாபுரத்தை சேர்ந்தவர் சீமத்துரை. இவருடைய மகன் செல்லக்கண்ணு. இவர் நேற்று முன்தினம் மாலையில் அப்பகுதியில் செல்போனில் பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் திடீரென்று செல்லக்கண்ணுவிடம் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர்.

உடனே, செல்லக்கண்ணு மற்றும் அவருடைய நண்பர்கள், பொதுமக்கள் விரட்டிச் சென்று அந்த நபர்களில் ஒருவரை மடக்கி பிடித்தனர். மற்ற 2 பேரும் தப்பி ஓடி விட்டனர். செல்லக்கண்ணுவின் நண்பர்களிடம் பிடிபட்ட நபரை அப்பகுதியினர் சரமாரியாக தாக்கினர். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. இதில் காயம் அடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

கை-கால்கள் கட்டப்பட்ட நிலையில்...

பின்னர் இரவில் சிகிச்சையில் இருந்தவரை 2 வாலிபர்கள் வெளியில் அழைத்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அரசு ஆஸ்பத்திரி நுழைவாயில் அருகே உள்ள கழிவறையில் அந்த நபர் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் ரத்தக் காயங்களுடன் பிணமாக கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, இறந்தவரின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

விசாரணையில், கொலை செய்யப்பட்டவர் ஜார்கண்ட் மாநிலம் புருகட்டு பகுதியைச் சேர்ந்த நிமயா முண்டா மகன் நமன்முண்டா (வயது 39) என்பது தெரிய வந்தது. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி வேப்பலோடையில் உள்ள நிறுவனத்துக்கு வேலைக்கு வந்து உள்ளார்.

பின்னர் சரியான வேலை இல்லாமல் திரிந்து கொண்டிருந்த அவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து செல்லக்கண்ணுவிடம் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு தாக்கப்பட்டது தெரியவந்தது.

5 பேரிடம் விசாரணை

அவரை கை, கால்களை கட்டிப்போட்டு அடித்துக் கொன்றது யார்? செல்போன் பறிப்பின்போது நமன்முண்டா சிக்கியதால், தப்பியோடிய அவரது கூட்டாளிகளான 2 பேர் ஆஸ்பத்திரிக்கு வந்து தங்களை அவர் காட்டிக் கொடுக்காமல் இருப்பதற்காக அவரை கொன்றனரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை தொடர்பாக 5 பேரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்