ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரை கத்தியால் குத்தி நகைகளை கொள்ளையடித்த தந்தை மகன் உட்பட 4 பேர் கைது.
திருப்பத்தூர் அருகே ஓய்வு பெற்ற தலைமையாசிரியரின் குடும்பதை கத்தியால் குத்தி மிரட்டி நகைகளை கொள்ளையடித்த தந்தை மகன் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் மாவட்டம் குரும்பேரி அடுத்த கொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் குப்புசாமி (75) மற்றும் இவருடைய மனைவி சரோஜா (70) தனியாக வசித்து வருகின்றனர். கடந்த 3ஆம் தேதி இரவு 12 மணி அளவில் 4 மர்ம நபர்கள் குப்புசாமியை பணம் கேட்டு மிரட்டி மார்பில் கத்தியால் குத்தியது மட்டுமல்லாமல் சரோஜா மற்றும் அவருடைய மகள் கல்யாணியை குத்தி காயப்படுத்தி 4 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர்,
இதுகுறித்து குப்புசாமி தாலுகா போலீசில் புகார் அளித்தை தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் சந்தேகத்தின் அடிப்படையில் ஏற்கனவே திருப்பத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி ஒன்றில் திருட்டு வழக்கில் ஈடுபட்ட முருகன்(42) என்பவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது முருகன் தனது கூட்டாளிகளான சுரேஷ்(45) இவரது மகன் அரவிந்த் குமாரும்(22), ஸ்ரீகாந்த் என்கிற சேட்டு (20) ஆகியோருடன் சேர்ந்து குப்புசாமி, அவரது மனைவி மற்றும் மகளை கத்தியால் குத்தி நகைகளை கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் அவர்களை கைது செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், இரண்டு கம்பல், மூக்குத்தி, மற்றும் அவர்கள் பயன்படுத்திய கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.