‘அடுத்த 11 நாட்கள் போர்க்களம் போன்று இருக்கும்’ நம்பிக்கையுடன் மக்களை தேடி செல்லுங்கள்

அடுத்த 11 நாட்கள் போர்களம் போன்று இருக்கும் எனவும், நம்பிக்கையுடன் மக்களை தேடி செல்லுங்கள் என்றும் பா.ஜ.க. வேட்பாளர்களுக்கு கே.அண்ணாமலை அறிவுரை வழங்கினார்.

Update: 2022-02-06 22:07 GMT
சென்னை,

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க. தனித்து களம் காண்கிறது. இந்த கட்சி சார்பில் சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள், தாம்பரம் மாநகராட்சியில் 70 வார்டுகள், ஆவடி மாநகராட்சியில் 48 வார்டுகளில் போட்டியிடும் பா.ஜ.க. வேட்பாளர்கள் அறிமுக கூட்டம், சென்னை வானகரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் கே.அண்ணாமலை தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் வி.பி.துரைசாமி, எம்.என்.ராஜா, பொதுசெயலாளர் கரு.நாகராஜன், சென்னை மண்டல தேர்தல் பொறுப்பாளர் கராத்தே தியாகராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.

மிகப்பெரிய எதிர்காலம்

கூட்டத்தில் அண்ணாமலை பேசியதாவது:-

அடுத்த 11 நாட்கள் நமக்கு போர்க்களம். அதற்கு செல்ல தயார்ப்படுத்துகிறோம். அகில இந்திய அளவில் பா.ஜ.க. செய்ததை போல, எந்த கட்சியும் இதுவரை செய்தது கிடையாது. தமிழகத்தில் ஒரு மாற்று சக்தியை கொண்டு வர வேண்டும். பா.ஜ.க. அனைவரையும் இணைத்து செயலாற்றக்கூடிய கட்சி. பா.ஜ.க. வேட்பாளர்களை பொறுத்தவரையில் ஒரு பக்கம் இளமை, மறுபக்கம் முதுமை. மொத்தத்தில் நமது வேட்பாளர்களை பார்க்கும் போது, மிகப்பெரிய எதிர்காலம் கண்களில் தெரிகிறது. தி.மு.க. ஆட்சிக்கு வந்து 8 மாதங்கள் ஆகிவிட்டது. தமிழகத்தில் ஒரு ஆட்சி எதையெல்லாம் செய்யக்கூடாது என்று நினைக்கிறோமோ? அதை செய்த பெருமை தி.மு.க.வுக்கு சேரும்.

பா.ஜ.க. வேட்பாளர்கள் மூலம் சென்னை மக்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்க வேண்டும். ஊழல் இல்லாத சென்னையை உருவாக்கத் தான் பா.ஜ.க. வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள். கட்சியின் நம்பிக்கையை காப்பாற்ற வேண்டியது உங்கள் கடமை. மக்கள் மாற்றத்துக்கு தயாராகிவிட்டார்கள்.

நரேந்திர மோடி ஆசி

முன்பு உண்மையை விட பொய் வேகமாக பரவி வந்தது. இப்போது உண்மை வேகமாக செல்கிறது. நம் கையில் இருக்கும் செல்போன் சக்திவாய்ந்த ஆயுதம். சமூக வலைதளத்தை முழுமையாக பயன்படுத்துங்கள். பா.ஜ.க.வின் செயல்பாட்டை எடுத்துச்சொல்லுங்கள். தி.மு.க. குடும்ப ஆட்சியை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வரை கொண்டு சென்றுவிட்டது.

வரக்கூடிய 11 நாட்கள் கடுமையாக உழைத்து வெற்றிப்பாதைக்கு பா.ஜ.க. வேட்பாளர்கள் செல்ல வேண்டும். உங்கள் மூலம் பா.ஜ.க. வளரவேண்டும். அதிகமான வாக்குகள் பா.ஜ.க.வுக்கு கிடைக்க வேண்டும். நீங்களும் வெற்றி பெறவேண்டும். தமிழகத்தில் 8 முனை போட்டி நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் செய்த நம்முடைய வேட்பாளர்களை அரசு எந்திரத்தை பயன்படுத்தி வெளியேற்ற நினைத்தார்கள். ஆனால் அதில் நாம் முதல் வெற்றியை பெற்றுவிட்டோம். 2-வது வெற்றி மக்களுடைய கையில் தான் இருக்கிறது. நீங்கள் தனிமனிதன் கிடையாது. பா.ஜ.க. ஆன்மாவின் வெளிப்பாடாகவும், தொண்டர்களின் பிம்பமாகவும், பிரதமர் நரேந்திர மோடியின் ஆசி பெற்றவராகவும் சென்று கொண்டு இருப்பீர்கள். தி.மு.க. அரசின் பொய் குற்றச்சாட்டுகளை மக்கள் மத்தியில் எடுத்து சொல்லுங்கள்.

உழைக்கும் படை

தி.மு.க. ஒரு போலியான அரசியலை செய்து வருகிறது. அந்த போலி பிம்ப அரசியல் கூடாது. உண்மையான அரசியல் என்பது நாம் முன்னெடுக்கும் அரசியல். படை பலம், பண பலம் இன்றி கூட்டத்தை கூட்டாமல், 20 பேர் என்னுடன் வந்தாலும் ஒரு தைரியமான படையாக, மக்களுக்கு நல்லது செய்யும் படையாக உழைக்கும் இந்த அரசியல் தான் நமது அரசியல். நமது அரசியலை நிச்சயம் மக்கள் உணர்வார்கள். முழுமையாக உழையுங்கள். முழுமையான நம்பிக்கையுடன் மக்களை தேடி செல்லுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்