கடலூர்:விருத்தகிரீஸ்வரர் கோவிலில் 20 ஆண்டுகளுக்கு பிறகு விமரிசையாக நடைபெற்ற மகா கும்பாபிஷேக விழா

விழாவில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து குவிந்தனர்.

Update: 2022-02-06 04:03 GMT

விருத்தாசலம்,

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் 5 நந்தி, 5 கோபுரங்கள், 5 தீர்த்தம், 5 பிரகாரம், 5 தேர்கள் என அனைத்தும் 5-ஆக அமையப்பெற்றுள்ளது தனிச்சிறப்பாகும்.

கோவிலில் கடந்த 2002-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றதையடுத்து, மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான விழா கடந்த 27-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து கடந்த 2-ந்தேதி மணிமுக்தாற்றில் இருந்து யாகசாலை பூஜைக்கு யானை மீது வைத்து தீர்த்தம் கொண்டு வரப்பட்டது. பின்னர் 3-ந்தேதி முதல் கால யாகசாலை பூஜை, நேற்று முன்தினம் 2 மற்றும் 3-ம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. நேற்று 4-ம் கால யாகசாலை, 5-ம் கால யாக சாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேக நாளான இன்று அதிகாலை 4 மணிக்கு 6-ம் கால யாகசாலை பூஜை, 5 மணிக்கு பரிகார யாகங்கள், பூர்ணாகுதி நடந்தது. அதனை தொடர்ந்து காலை மேள, தாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்று கோவில் கோபுரங்கள், விமானங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் 8.30 மணிக்கு மூல மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தின்போது பக்தர்கள் மீது ஹெலிகாப்டர் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. விழாவில் கலந்து கொள்வதற்காக விருத்தாசலம் மட்டுமின்றி சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்களும் வந்து குவிந்தனர்.

மேலும் செய்திகள்